செய்திகள்

சர்வதேச நியமங்களுக்கு அமைவான உள்ளக விசாரணைக்கு ஒத்துழைப்பு: பெல்ட்மன்

போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைய இடம்பெறும் உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு சனிக்கிழமை கொழும்பு வந்த பெல்ட்மன், தன்னுடைய விஜயத்தின் இறுதியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், பொறுப்புக் கூறலுக்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளையிட்டு தான் திருப்தியடைவதாகக் குறிப்பிட்டார்.

நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த அவர், நேற்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு தரப்பினருக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் இலங்கை காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.