செய்திகள்

சர்வதேச புலி வலையமைப்பால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : கோதாபய

இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது அமெரிக்கா இராஜங்க திணைக்களத்தின் அறிக்கையூடாக நிருபனமாகியுள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையை ஆதாரம்காட்டி அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என்பதால், விடுதலைப் புலிகள் முற்றாக இல்லாமல் போய் விட்டனர் என்று அர்த்தமில்லை. இன்னமும் சில விடுதலைப் புலிகள் தனிநாட்டை அமைப்பதற்கான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அர்ப்பணிப்புடன் உள்ளனர். முன்னர், மிக உயர்ந்த பாதுகாப்பு தரம் பேணப்பட்டது.  புலனாய்வு அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இப்போது வடக்கு கிழக்கில் முக்கியமான இடங்களில் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டிருந்த பெருந்தொகை நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் மீண்டெழுவதை தடுக்க இந்த இராணுவ முகாம்கள் அவசியம். புதிய அரசாங்கம், வடக்கில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கியது வருத்தமளிக்கும் விடயம்.
சில சந்தர்ப்பங்களில், முக்கியமான இடங்களில் இருந்த இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில்  விடுதலைப் புலிகளுக்கு மூலோபாய நலன்களைக் கொடுத்து குழப்பமான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.