செய்திகள்

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காதீர்கள்: ஐ.நா.வுடன் இணைந்து செயற்படுங்கள்: ஜி.எல்.பீரிஸ்

ஐ.நாவுடன் ஒத்துழைத்து நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்றுமாறு புதிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச விசாரணைகளின் போது எனது ஆலோசனைகளையும் பெறலாம். – இவ்வாறு மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐ.நா. மற்றும் அதன் கிளை நிறுவனங்களை நாம் எதிர்க்கவில்லை. இணைந்து செயற்பட முடியாது என்றும் கூறவில்லை. ஒரு தலைப்பட்சமான செயற்பாடுகளுக்கு எதிராகவே செயற்பட்டோம் என்றும் கூறினார்.

அத்துடன், சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என்றும், நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை புதிய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயித் அல் – ஹ{ஸைனுக்கு இலங்கை வருமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அழைப்பை நாம் வரவேற்கின்றோம். எமது அரசின்போதும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் வந்திருந்தார்.

எமது அரசு விரோதமான வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை. ஐ.நாவுடன் இணைந்து செயற்படுதல் அவசியம். நாமும் அந்த அணுகுமுறையையே கடைப்பிடித்தோம். எனினும், சில அமைப்புகள் சில சந்தர்ப்பங்களில் பக்கச்சார்பாக செயற்பட்டன. அதை நாம் எதிர்த்து நின்றோம். இதன் பிரகாரமே சர்வதேச விசாரணையை நிராகரித்தோம்.

புதிய அரசும் இதற்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன், ஐ.நாவுடன் ஒத்துழைத்து நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச விசாரணைகளின்போது எனது ஆலோசனைகளையும் பெறலாம். அதேவேளை, நான் அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் விரிவுரைப் பணியில் ஈடுபட்டேன். நல்லிணக்கத்துக்காக உண்மையைக் கண்டறியும் குழு நிறுவப்பட்டது. அது வெற்றியும் அடைந்தது.

எனவே, இதுபோன்ற குழுக்களின் அனுபவப்பகிர்வைப் பெற்றுக்கொள்வது தேசிய நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக இருக்கும். தற்போது புதுயுகம் பிறந்துள்ளது. எனவே, வெளிவிவகார செயற்பாடுகளின்போது இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.