செய்திகள்

சவுதி அரேபியாவில் தொழில்புரியும் பணிப் பெண்களின் சம்பளம் உயர வேண்டும்: தலதா அத்துக்கோறள

இலங்கையிலிருந்து சென்று சவுதி அரேபியாவில் தொழில் புரியும் பெண்களுக்கு ஆகக் குறைந்த சம்பளமாக ரூபா 60,000 வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள அந்நாட்டு தூதுவராலயத்துடன் ஏற்கனவே நடத்தியுள்ள பேச்சுவார்தையின் பேரில் இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று வருகை தரவிருப்பதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்நாட்டில் தொழில் புரியும் பணிப்பெண்கள் மாதமொன்று ரூபா 30,000 தொடக்கம் 35,000 சம்பளமாக பெறுவதாக கூறப்படுகின்றது.

இந்த தொகை ஆகக் குறைந்தது ரூபா 60,000 ஆக இருக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என தெரிவித்துள்ள அமைச்சர் தலதா அத்துக்கோறள, ரூபா 50,000ற்கும் 60,000ற்கும் இடைப்பட்ட தொகையாவது கிடைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் சவுதி அரேபிய குழுவுடன் அந் நாட்டில் இலங்கை பணிப் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும் பேசப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப் பெண்களாக அழைக்கப்படும் பெண்களுக்கு உள்நாட்டு முகவர்கள் ஊடாக எஜமான்களால் ஒரு தொகை பணம் கமிஷனாக வழங்கப்படுகின்றது.

அந்த கமிஷன் தொகையில் முழுத் தொகையும் அநேகமாக பணிப் பெண்களுக்கு கிடைப்பது இல்லை என ஆட்களை திரட்டி கொடுக்கும் உள்ளுர் முகவர்கள் கூறுகின்றார்கள்.

இந்த கமிஷன் தொகை நிறுத்தப்பட்டால் இந்த சம்பள அதிகரிப்பு சாத்தியப்படுவது இலகுவாக அமையும் என்றும் உள்ளுர் முகவர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.