செய்திகள்

சவுதி மசூதி தற்கொலை குண்டு தாக்குதலில் 10ற்கும் மேற்பட்டவர்கள் பலி

சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷியா இனத்தவர்களின் மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 10ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது 70ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்கதீவ் என்ற கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட இமாம் அலி மசூதியில் பாரிய குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை தாக்குதல் இடம்பெற்றவேளை பலர் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட தாக்குதலை தொடர்ந்து மசூதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தரையில் போர்த்தப்பட்ட நிலையில் காணப்படுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
பிராந்தியத்தில் ஷியா,சுனி மதத்தவர்களிடையே பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. யேமனில் உள்ள ஷியா கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சவுதிஅரேபியா இராணுவநடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.