செய்திகள்

சாட்சிகள் பாதுகாப்பு சட்ட மூலத்தை வரவேற்கிறது தமிழ்க் கூட்டமைப்பு: சம்பந்தன்

குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியடைந்திருக்கும் அதேவேளை, அதனை முழுமையாக அமுல்படுத்துவதிலேயே அனுகூலங்கள் மக்களை சென்றடையுமென தெரிவித்திருக்கிறது.

இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் அதனை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பான ஐயப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்ததாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

“பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் பாதுகாப்பு தொடர்பாக நிச்சயமற்ற நிலையில் இருந்தால் அவர்கள் முன்வந்து சாட்சியமளிக்க மாட்டார்கள்’ என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் நீதியரசர் பி.என். பகவதி தலைமை தாங்கிய சுயாதீன மாண்புமிக்கோர் குழுவானது சாட்சிகள் பாதுகாப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்துமாறு இலங்கைக்கு பரிந்துரைத்திருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் 2005 2006 காலப் பகுதியில் ஆயுதப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சிலவற்றை விசாரணை செய்த உடலகம ஆணைக்குழுவின் பணிகளை சர்வதேச சுயாதீன மாண்பு மிக்கோர் குழு மேற்பார்வை செய்தது. ஆனால் பாராளுமன்றத்தினூடான சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் பற்றுறுதி குறைவாகக் காணப்பட்டமையால் நிறைவேற்றப்படாமல் இருந்தது என்று சம்பந்தன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையை ஸ்தாபித்தல், முகாமைத்துவ சபையை அமைத்தல், இலங்கை பொலிஸ் பாதுகாப்புப் பிரிவை ஏற்படுத்துதல், உயர்மட்ட ஆலோசனைக்குழுவை அமைத்தல் என்பன இச்சட்டமூலத்தின் முக்கியமான விடயங்களாகும். தேசிய அதிகார சபையில் சம்பந்தப்பட்டிருப்போர் குற்றவியல் துறையில் நிபுணர்களாக விளங்குவார்கள். சட்டமா அதிபரினாலும் பொலிஸ் மா அதிபரினாலும் நீதியமைச்சரினாலும் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆலோசனை சபையில் பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், சமூக செயற்பாட்டாளர்கள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்டோரை அச்சுறுத்தினால் அல்லது மிரட்டினால் 310 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடும் வழங்கப்படும். சாட்சிகள் மற்றும் குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி அளிப்பதற்கு நிதியமும் ஏற்படுத்தப்படும்.

இதேவேளை அரசாங்கத்தினதும் அதன் அலுவலர்களினதும் “எங்கும் நிறைந்த’ பிரசன்னத்தை பிரதிபலிக்கும் நிறுவனங்களின் கட்டமைப்பானது முறைமையின் சுதந்திரத்தை குறைப்பதாக அமையுமென்று மனித உரிமைப் பணியாளர்கள் கூறியுள்ளனர். இதேவேளை சாட்சிகளையும் பாதிக்கப்பட்டோரையும் பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமான நிலைப்பாட்டில் இருக்குமானால் முதலாவதாக பயங்கர வாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்கிவிட வேண்டுமென தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.