செய்திகள்

சாட் நாட்டில் காவல்துறை தலைமையகம் மீது அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல்: 23 பேர் சாவு

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் முன்னிலையில் உள்ள நாடான சாட் படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று தலைநகர் என் ஜமேனாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகம் மற்றும் போலீஸ் அகாடமி அலுவலகங்களுக்கு வெளியில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

4 தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். 101 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் சாட் இணைந்தது முதல் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதனையும் மீறி இன்று தலைநகரில் முதல் முறையாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை
வடகிழக்கு நைஜீரியாவில் ஆறு ஆண்டுகளாக வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், இதுவரை சுமார் 15 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர். எல்லைகளைக் கடந்தும் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.