செய்திகள்

‘சாரா’… டயானா- சார்லஸ் தம்பதிக்கு பிறந்த ரகசிய மகள்..? அமெரிக்க பத்திரிக்கையால் புதிய சர்ச்சை

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவிற்கு இரண்டு மகன்களைத் தவிர ரகசியமாக வேறொரு மகள் இருப்பதாக அமெரிக்காவின் பிரபல வாரப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதிக்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் இருப்பது உலகறிந்த விசயம். ஆனால், இத்தம்பதிக்கு ரகசிய மகள் ஒருவர் இருப்பதாக அமெரிக்காவின் பிரபல வாரப் பத்திரிக்கையான குளோப் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பிரபல கிசுகிசுப் பத்திரிக்கையான குளோப்பில் வெளியாகியுள்ள இந்த தகவலால் புதிய சர்ச்சை உண்டாகியுள்ளது. அக்கட்டுரையில், சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்திற்கு முன்னர், டயானாவால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா என, சார்லஸின் தாயான ராணி எலிசபெத்திற்கு சந்தேகம் எழுந்தது எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, டயானாவின் கருமுட்டை மற்றும் சார்லஸின் விந்தணுவை எடுத்து இணைத்து அவர்களுக்கு குழந்தை பிறக்குமா என மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் குழந்தை பிறப்பு இருப்பதை உறுதி செய்தபின்னர், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்களில் ஒருவர் அவற்றை அழிக்காமல் பாதுகாப்பாக எடுத்துச் சென்று, தனது மனைவிக்கு தெரியாமல் அவருடை கருப்பையில் செலுத்தி விடுகிறார். இதன் மூலம் கருவுற்ற மருத்துவரின் மனைவி 1981-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் அக்கட்டுரையில் கூறபட்டுள்ளது. அக்குழந்தைக்கு சாரா என்றும் பெயரிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள அந்த பெண் வில்லியமையும், அவரது மனைவி கேட் மிடில்டினையும் சந்தித்துப் பேசியதாவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.