செய்திகள்

சார்லி ஹெப்டோவுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான், கராச்சியில் பிரான்ஸ் அங்கத இதழ் சார்லி ஹெப்டோவுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஏஜென்சி புகைப்பட நிருபர் ஒருவர் சுடப்பட்டார்.

பாகிஸ்தான், கராச்சியில் பிரான்ஸ் தூதரகம் முன்பு அங்கத வார இதழ் சார்லி ஹெப்டோவை எதிர்த்து நிகழ்ந்த ஆர்பாட்டத்தில் தங்களது புகைப்பட நிருபர் ஒருவர் சுடப்பட்டதாக பிரெஞ்ச் செய்தி ஏஜென்சியான ஏ.எஃப்.பி. தெரிவித்துள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி அரசியல் கட்சியின் மாணவர்கள் இன்று மொகமது நபியை கொச்சைப் படுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்ட, தாக்குதலுக்குள்ளான சார்லி ஹெப்டோ பத்திரிகையின் செயலைக் கண்டித்து கராச்சியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூதரகத்தை நோக்கி பேரணி முன்னேறிக் கொண்டிருக்கும் போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தூதரகத்தை நோக்கி ஆர்பாட்டக்காரர்கள் செல்லாதவாறு போலீஸ் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி அப்புறப்படுத்தினர். அப்போது எச்சரிக்கை விடுக்கும் விதமாக போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஏ.எஃப்.பி. புகைப்பட கலைஞர் அசிஃப் ஹசன் காயமடைந்தார்.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி ஏ.எஃப்.பி. செய்தி இயக்குநர் மிஷேல் லெரிடன் கூறும்போது, “ஹசனுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவரது உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை.” என்று தெரிவித்தார்.