செய்திகள்

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை குண்டு பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட இருந்ததாம் என்கிறார் பீரிஸ்

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட இருந்ததாகவும் இந்த சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சமிக்ஞையாகும் என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பொரள்ளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:- “சாவகச்சேரி பகுதியில் இன்று (நேற்று) வீடொன்றிலிருந்து தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு ஏதுவான சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலொன்றின் அடிப்படையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதை சாதாரணமாகக் கருதிவிட முடியாது. எமக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஏதுவான குறித்த வெடிபொருட்கள் இரகசியமாக கொழும்புக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

நிலைமை இப்படி இருக்கையில், சம்பூர் உட்பட ஏனைய பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அரசு அகற்றி வருகின்றது. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர்களையும் இந்த அரசு விடுதலை செய்து வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஏதுவான பொருட்கள் வட பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்படுவது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலான சமிக்ஞையாக விளங்குகின்றது” – என்றார். –