செய்திகள்

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீது இரசாயனப் பகுப்பாய்வு

கடந்த 30 ஆம் திகதி சாவகச்சேரி பிரதேசத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட பொருட்களையும் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் திருமதி அருணி ஆண்டிக்கல பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன் புலோ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த  30 ஆம் திகதி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள் சம்பந்தமாக கடந்த 4 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு விசாரணை பொலிஸார் நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே நீதவான் இந்த உத்தரவை விடுத்தார்.
யாழ்ப்பாணப் பிரதேச புலனாய்வுப் பொலிஸ் அதிகாரி தர்மசேன பயங்கரவாதத் தடுப்பு விசாரணை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை பொலிஸ் அதிகாரி இந்து நில் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இதன் அடிப்படையில் தற்கொலை அங்கியொன்று, 4 தட்டைக் குண்டுகள், காந்தக் குண்டுகள் அடங்கிய இரண்டு பெட்டிகள், 9 மி.மி. 50 தோட்டா அடங்கிய இரண்டு பெட்டிகள், வெடி பொருட்கள் அடங்கிய இரு பெட்டிகள், இரண்டு பொதி சிலிக்கன் மற்றும் அவை சுற்றப்பட்டிருந்த  2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதியிடப்பட்ட சிங்களப் பத்திரிகைகளின் இரண்டு பக்கங்கள் குறித்த வீட்டில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களில் தற்கொலை அங்கியையும் உடன் வெடிக்கும் நிலையில் தயார்படுத்தப்பட்டிருந்த குண்டுகள் சிலவற்றையும் யாழ்ப்பாண விசேட அதிரடிப் படையினர் வெடிக்க வைத்ததாக அந்த அதிகாரி நீதிமன்றில் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான வெல்லன் குளம், பிள்ளையார் வீதியைச் சேர்ந்த எட்வட் ஜூலியன் ரமேஷ் என்பவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்து யாழ்ப்பாண பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு விசாரணை பொலிஸாரிடம் கையளித்த நிலையில் அவரை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
n10