செய்திகள்

சிகரெட் கம்பனிக்காரர்கள் விடுதலைப்புலிகளைவிடவும் பயங்கரமானவர்கள்: புத்திக பத்திரண

விடுதலைப்புலிகளைவிடவும் மிகவும் பயங்கரமானவர்கள் சிகரெட் கம்பனிகள். தினமும் 55 பேரை இவர்கள் கொலை செய்து வருகின்றனரென ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினராக புத்திக பத்திரண குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை திருத்தச் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய புத்திக பத்திரண மேலும் கூறுகையில் :

இன்று ஒவ்வொரு அரச வைத்தியாசலைகளிலுமுள்ள 100 கட்டில்களில் 15இல் புகை பிடிப்பவர்களே படுத்திருக்கிறார்கள். தமது சந்தோஷம், துக்கம், மன அழுத்தம், பொழுதுபோக்கு, நாகரிகத்திற்காக புகைக்கும் இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் அரசு பெருமளவு பணத்தை மருத்துவ சிகிச்சைக்காக செலவிடுகின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தில் கூட ஒரு நாளைக்கு சராசரியாக 40 பேர் தான் உயிரிழந்தார்கள். ஆனால் யுத்தம் முடிந்து புலிகளும் அழிக்கப்பட்ட நிலையில் இந்த சிகரெட் கம்பனிக்காரர்களால் தினமும் 55 பேர் கொல்லப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பை விடவும் இந்த சிகரெட் கம்பனிக்காரர்கள் மிகவும் பயங்கரமானவர்கள், கொலையாளிகள், வரிக்கொள்ளையகர்கள்.

சிகரெட் கம்பனிகள் தொடர்பான வழக்கு இடம்பெற்ற போது அதில் ஆஜரான பல சட்டத்தரணிகளின் கறுப்பு உடையில் சிகரெட் புகையே படிந்திருந்தது. சில நீதிபதிகள், பல அரசியல்வாதிகளின் வாய்களுக்குள் புகையிலை பணமாகத் திணிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்றார்.