செய்திகள்

சிகிரியா கண்ணாடிச் சுவரில் எழுதிய தமிழ் யுவதிக்கு தொடர்ந்தும் சிறை

சிகிரியா வளாகத்தில் கண்ணாடி சுவரில் எழுதிய குற்றத்தில் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கிய பின்னரும் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற தமிழ் யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உலக பாரம்பரியமாக கருதப்படும் சிகிரிய வளாகத்தில் உள்ள சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த தமிழ் யுவதி கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் கடந்த வாரம் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த யுவதியை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செய்த பரிந்துரைக்கு அமைவாக அது தொடர்பான படிவத்தில் ஜனாதிபதி கடந்த 3ஆம் திகதி இரவு கைச்சாத்திட்டார்.

இதனையடுத்து சில தினங்களில் இந்த யுவதி விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

எனினும் குறித்த தமிழ் யுவதி தொடர்ந்தும் சிறையில் உள்ளாரென சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் கெனத் பெர்ணான்டோ எமக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு குறித்த அறிவிப்பு இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.