செய்திகள்

சிகிரியா சுவரில் எழுதிய தமிழ் யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி

சிகிரியாவில் உள்ள சுவரில் எழுதி சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

தேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும் அதேநேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா கூறியிருந்தார்.