சிங்கப்பூர் கூட்டத்தில் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிப்பு: ஈழத்தமிழர் மக்களவை
“இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்” எனும் தலைப்பில் சிங்கப்பூரில் கடந்த வரம் 3ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற கூட்டத்தில் புலம் பெயர் தமிழ் மக்களின் பங்குபற்றுதலும் இருந்தது என்று அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தென்னாபிரிக்க நாட்டின் அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கும் பத்திரிகை அறிக்கையினை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேள்விக்குள்ளாக்கி இருப்பதுடன் சந்தேகங்களையும் வெளியிட்டிருக்கிறது.
தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த நிகழ்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் ஈழத்தமிழர் மக்களவை இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சுவிஸ் அரசாங்கத்தாலும் In Transformation Initiative (ITI) என்ற தென் ஆபிரிக்க அமைப்பினாலும் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்” என்ற கூட்டத்தில் பங்குபற்றியதாக கூறப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம், தமிழர்களுக்கு ஆச்சரியத்தை தருகின்றது.
14 நாடுகளிலுள்ள மக்களவைகளின் கூட்டமைப்பாக இயங்கி வரும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அமைதி கிடைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தவகையில் தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த நிகழ்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இரகசியமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியால் தமிழர்களின் உண்மையான பிரச்சனைகளும் அவர்களின் நீண்டகால வேணவாக்களும் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது. தமிழர் தரப்பின் முக்கியமான பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்காளிகளாக்கப்படாதமை தமிழருக்கு பயனளிக்கப் போவதில்லை.
களத்தில் காத்திரமான மாற்றங்கள் ஏற்படாத நிலையிலும் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழர் தமது உண்மையான வேணவாக்களை கூறமுடியாத சூழ்நிலையிலும் அமைதிக்கான முன்னெடுப்புகளின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளில் தமிழரின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை இதனை மேலும் சீர்கெடச் செய்துள்ளது.