செய்திகள்

சிங்களத்தில் வந்த சுற்றறிக்கை: உடன் நடவடிக்கைக்கு கிழக்கு முதல்வர் பணிப்பு

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் இந்த வருடத்துக்கான முதலாவது சுற்றறிக்கை, சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் கவனத்துக்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து, உடனடியாக சகல தமிழ் பாடசாலைகளுக்கும் தமிழில் சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கல்வியதிகாரிகளைப் பணித்துள்ளார்.

முதலமைச்ச ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிடுகையில்: கிழக்கு மாகாணம் மூவின மக்களும், இரு மொழிகள் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற மாகாணம் என்பதனால் இருமொழிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கி சகல தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் தமிழ் மொழியிலும், சிங்கள மொழிப்பாடசாலைகளுக்கு சிங்கள மொழியிலும் சுற்று நிரூபத்தினை அனுப்புமாறு இன்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சிங்கள மொழியில் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம், தொழிற்சங்கள், இன்னும் பல அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே முதலமைச்சர் அவசர நடவடிக்கையாக தமிழில் சுற்று நிரூபம் அனுப்ப பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.