செய்திகள்

சிங்கள அரசில் பெறும் எந்த உயர் பதவிகளும் தமிழ்த் தேசியத்தைச் சிங்கள தேசியத்துக்குள் கரைப்பதாகவே அமையும்! சி.அ. ஜோதிலிங்கம்

தமிழ்த் தேசம் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு அதற்குச் சம அந்தஸ்து கிடைக்காத வரை சிங்கள அரசில் பெறும் எந்தவொர உயர் பதவிகளும் தமிழ்த் தேசியத்தைச் சிங்கள தேசியத்துக்குள் கரைப்பதாகவே அமையும். இதனை ஒரு போதும் தமிழ்மக்கள் அங்கீகரிக்கக் கூடாது.

இவ்வாறு காட்டமாகத் தெரிவித்துள்ளார் இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டடத்தரணியுமான சி.அ யோதிலிங்கம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முனைப்புக் காட்டி வருகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறீலங்கா அரசின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக மூன்று பேர் ஆலாய்ப் பறக்கின்றனர். அவர்களில் இருவர் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த நிமால் சிறீபால டி.சில்வா, தினேஸ் குணவர்த்தனா என்போரே அவர்களாவார். மூன்றாமவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

முதல் இருவரும் அப் பதவிக்காக அடிபடுவது பற்றி எமக்கு அக்கறையில்லை. ஆனால், சம்பந்தன் அப் பதவியைப் பெறுவதற்காக அலைவது தான் தமிழ்த் தரப்பின் அக்கறைக்குரியது. ஏனெனில் அவர் தமிழ்த் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அப்பதவியைப் பெற இருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி மறைமுகமாகச் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெறுவதை ஊக்குவிக்கின்றது. அரசாங்கத்துடன் இணைந்த கொண்ட முஸ்லீம், மலையகக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. சிங்கள இனவாதக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பனவும் ஆதரிக்கின்றன. ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த இந்திய மேற்குலகக் கூட்டும் இதற்காகக் காய்களை நகர்த்துகின்றன.

இந்தவிடயத்தில் ஒவ்வொரு தரப்புக்கும் வெவ்வேறு இலக்குகள் உள்ளன. ஆனால் ஒரு இலக்கில் மட்டும் எல்லோரும் இணைகின்றனர். அந்த இலக்கு தமிழ்த் தேசிய அரசியலைச் சிங்கள இனவாதத்தினுள் கரைத்தல் என்பது தான்.

மேற்குலக இந்தியக் கூட்டு தமிழ்த் தரப்பை ஆட்சியாளரின் பங்காளியாதக்கத் துடிக்கின்றது. தமிழர் தாயகம் வரும் இக் கூட்டின் இராஜதந்திரிகள் தமிழ்மக்களுக்கு இது விடயத்தில் போதனை செய்ய முயற்சிககின்றனர். தமிழ்மக்களின் வாயாலேயே இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு நன்மை பயக்கின்றது என்ற வார்த்தையைக் கேட்க ஆசைப்படுகின்றனர். இதற்கு மாற்றாகத் தமிழ் முக்கியஸ்தர்கள் கருத்துக்களைக் கூறும் போது எரிச்சலடைகின்றனர்.

தமிழ்மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இந்திய மேற்குலகக் கூட்டு அரச சார்பற்ற நிறுவனங்களையும் இறக்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. கூட்டமைப்புடன் முரண்படும் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்தித்து நாம் உங்களுக்கு நிதியுதவிகளைச் செய்கின்றோம். நீங்கள் மக்கள் நலன் திட்டங்களை முன்னெடுங்கள் என ஆசை வார்த்தைகளையும் கொட்டியுள்ளன.

மேற்குலக இந்தியக் கூட்டைப் பொறுத்தவரை தமது நலன்களைப் பேண வசதியாக தாம் உருவாக்கிய ஆட்சியைப் பாதுகாக்க விரும்புகின்றன. அதற்குச் சில எண்ணப்பாடுகளை வைத்திருக்கின்றன. தமிழ் அரசியல் ஆட்சிக்குத் தடையாகவிருக்கக் கூடாது. தமிழ்த் தேசிய மீளெழுச்சி இடம்பெறக் கூடாது.

தமிழ் அரசியல் என்பது ஒரு எப்போதும் தாம் கையாளக் கூடிய மட்டம் வரையில் தானிருக்க வேண்டும். தாம் விரும்பும் போது தமிழ் அரசியல் வினைத் திறன் கூட வேண்டும். தாம் விரும்பாத போது குறைக்க வேண்டும். அதாவது தமது புவிசார் அரசியல் நலன்களுக்காகக் கூட்டிக் குறைக்கும் கருவியாக இருக்க வேண்டும். கூட்டிக் குறைக்கும் பிரதான அழத்தி தங்களிடமே இருக்க வேண்டும்.இவையே அக் கூட்டின் எண்ணப்பாடுகள்.

இங்கே ஒரு உண்மை பட்டவர்த்தனமாக வெளிப்படுகின்றது. இந்தக் கூட்டு இலங்கைத் தீவில் செல்வாக்குச் செலுத்துவதற்கு அதற்குக் கிடைத்த பிரதான கருவி தமிழ் மக்கள் தான். ஆனால், அந்தக் கருவி சுயாதீனமாக சொந்த நிகழ்ச்சி நிரலுடன் இருக்கக் கூடாது என்பதில் அது கவனமாக இருக்கின்றது. மகிந்தர் அரசுடன் இணைந்து புலிகளை அழித்தமைக்கு இது தான் காரணம்.

ஆனாலும், உட்கிடையாக இந்தப் புவிசார் அரசியலில் தமிழ்மக்களுக்கு ஒரு வலிமையான இடமிருக்கின்றது என்பதையும் இக் கூட்டுத் தாமாகவே வெளிப்படுத்துகின்றது. இந்த வலிமையைப் புரிந்து கொள்ளத் தமிழ்மக்கள் தவறக் கூடாது. இது தான் தமிழ் அரசியலுக்குச் சாதகமான புறக்காரணி.

எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இந்தக் கூட்டிற்கு இன்னோர் இலக்குமுண்டு. சீனாவை அகற்றுதல் செயற்திட்டம் நிறைவேறும் வரை எதிர்க்கட்சி அரசுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காத தரப்பாக இருக்க வேண்டுமென்பதே அது. அதற்குத் தாம் இலகுவாகக் கையாளக் கூடியவராக எதிர்க்கட்சித் தலைவரிருக்க வேண்டும். அதற்குச் சம்பந்தரே மிகப் பொருத்தமானவர் என அது கருதுகின்றது.

சித்தாந்த பலம் கொண்ட பேரினவாதக் கட்சிகளாகக் கருதப்படுபவை ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் தான். அவை சம்பந்தனை ஆதரிப்பதற்குக் காரணம், தமிழ்த் தேசியத்தைச் சிங்கள தேசியத்துக்குள் கரைத்து விட வேண்டும் என்பது தான். தமிழ்த் தேசமும், சிங்களத் தேசமும் இணைந்து ஒரு அரசு உருவாக்கம் இடம்பெறுவதை அவை என்றுமே விரும்பியதில்லை. அரசுடன் இணைந்துள்ள மலையக, முஸ்லிம் கட்சிகளும் தமிழ்த் தேசிய மீளெழுச்சியை விரும்பவில்லை. சம்பந்தனை ஆதரிப்பதற்கு அதுவே காரணம்.

தமிழ்த் தேசம் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு அதற்குச் சம அந்தஸ்து கிடைக்காதவரை சிங்கள அரசில் பெறும் எந்த உயர் பதவிகளும் தமிழ்த் தேசியத்தைச் சிங்கள தேசியத்துக்குள் கரைப்பதாகவே அமையும். இதனை ஒரு போதும் தமிழ்மக்கள் அனுமதிக்கக் கூடாது.

யாழ்.நகர் நிருபர்-