செய்திகள்

சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் உளப் பூர்வமாகத் தீர்க்கப்பட வேண்டும்

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் உளப் பூர்வமாகத் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்திறி நெசவுத் தொழிற்சாலைகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 01.04.2016 ஏறாவூரில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,

இந்த நாட்டிலுள்ள எல்லா மக்களும் சந்தோசமாகன வாழ்வதற்குரிய சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயம்பற்றி இனவாதத்தோடு பேசித்திரிவதில் அர்த்தமில்லை.
எனவே இந்த விடயத்தில் எங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

ஆனால் தென்னிலங்கையிலுள்ள சில கடும்போக்காளர்கள் நாங்கள் இந்த நாட்டைப் பிரிக்கப்போகின்றோம் என்றும் காட்டிக் கொடுக்கப்போகின்றோம்.
சர்வதேசத்துக்கு அடிபணிய வைக்கப்போகின்றோம் என்று கூறுகின்றோம் என்று விமர்சிக்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறு விமர்சிக்கின்றவர்களைவிட இந்த நாட்டைப் பற்றி எங்களுக்கு அதிக அக்கறை இருக்கின்றது.

எனவே எதிராகப் பேசித் திரிவதை விட விமர்சிப்பவர்கள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எங்களோடு சேர்ந்து கைகோர்க்க வேண்டும்.

இந்த நாடு வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்று பேதம் பாராது எல்லாப் பிரதேசங்களும் ஒரே மாதிரியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
கல்வி சுகாதாரம், போக்குவரத்து, தொழில் வாய்ப்பு,வாழ்க்கைத் தரம் ஒரேமாதிரியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

பாரபட்சத்தின் காரணமாக மீண்மொரு துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு இந்த நாட்டை இட்டுச் செல்ல எவரையும் அனுமதித்து விடக் கூடாது.என்றார்.

சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறித் தொழிற்சாலை என்பவை கிழக்கு மாகா முதலமைச்சரipன் முயற்சியினால் ஏறாவூரில் நிருமாணிக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி திட்டமிடல் நீர்விநியோக அமைச்சர் றவூப் ஹக்கீம் உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உட்;பட பல அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

n10