செய்திகள்

சித்திரவதைகளை நிறுத்தக்கோரி 16 தமிழ்க் கைதிகள் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது நடத்தப்படும் துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும், தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட  வேண்டும் எனவும் கோரி நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் ‘எச்- 1’ பிரிவில் தனியான வார்ட்  ஒன்றில் 16 தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் சிங்கள கிரிமினல் கைதிகளும் இப்போது அடைக்கப்பட்டிருப்பதால் தமிழ்க் கைதிகள் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரியான உப்புல்தெனிய என்பவரும் சிங்களக் கைதிகளுடன் இணைந்து தமிழ்க் கைதிகளைத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தமிழ்க் கைதிகள் மூவர் படுகாயமடைந்திருந்தனர். அதன்பின்னரும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகள் அதிகளவுக்கு இடம்பெறுகின்றது.

இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள சிங்கள கிரிமினல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களாகும். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட இவர்கள், தமிழ்க் கைதிகளை புலிகள் எனக் கூறி துன்புறுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே தமது ◌ாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்தே தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.  உண்ணாவிரதம் இருப்பவர்களின் விபரம் வருமாறு:

1. விஜயகுமார்
2. கௌதமன்
3. பரலமேஸ்வரன்
4. கோகிலன்
5 உமல் ஹத்தாஸ்
6. நலரத்தினம்
7. தினேஷ்
8. கோபிநாத்
9. அருளானந்தம்
10. ரைட்டஸ்
11. சாருகேசன்
12 குருபரன்
13. சந்திரன்
14. லாபீர்
15. சாம்சன்
16. புதியவன்