செய்திகள்

ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலம் வறுமையை அகற்ற முடியும் : யாழ்.வணிகர் கழகத் தலைவர்

வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு வர்த்தகர்கள் மாத்திரம் சேவைகளை வழங்குவதுடன் நின்று விடாது சமூகத்திலுள்ள வசதி படைத்தவர்கள்,புத்தி ஜீவிகள் ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலம் எமது மாவட்டத்திலுள்ள வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும.

இவ்வாறு தெரிவித்தார் யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரன்.

யாழ்.வணிகர் கழகம் நல்லூர் மற்றும் ஊர்காவற்துறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 31 சிற்றுண்டி உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்து வரும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இன்று 17 ஆம் திகதி புதன்கிழமை வழங்கியது.இதற்கான நிகழ்வு யாழ்.வணிகர் கழகப் பணிமணையில் இன்று இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஏற்கனவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைப்படுத்;தி வருகிறோம்.குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்து வருகிறோம்.மற்றும் சமூகத்திலே நலிவுற்ற மக்களுக்கான உதவியையும் நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

யாழ்ப்பாண வணிகர் கழகம் வணிகத்துடன் மாத்திரம் தங்களின் நிகழ்ச்சி நிரலை வரையறுக்காமல் நாங்கள் எமது வர்த்தக சமூகத்துடன் இணைந்து சமூகத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் ஆராய்ந்து பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறோம்.அந்த வகையில் போர் நடைபெற்ற போதும்,போர் முடிவுக்கு வந்த பின்னரும் எமது மக்களுக்கு நாங்கள் பல வாழ்வாதாரத் திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.

அந்த வகையில் தான் யாழ்.மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் அந்தந்த பிரதேச செயலரினூடாகப் பயனாளிகளைத் தெரிவு செய்து சுயதொழிலுக்கான ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி வருகிறோம்.அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் வேலணை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கட்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறான உதவித் திட்டங்களை வழங்கியுள்ளோம்.இன்று நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் ஆகியவற்றுக்குட்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலுமுள்ள வறுமைக்குட்பட்ட மக்களின் நலன் கருதி அவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே நாங்கள் இந்த வாழ்வாதார உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.எமது உதவித் திட்டத்துக்கு வெளிநாட்டு நிதியுதவியோ அல்லது அரச நிதியுதவியோ கிடைப்பதில்லை.இந்த உதவித் திட்டம் முழு அளவிலான வர்த்தகர்களின் நிதிப் பங்களிப்பில் மாத்திரமே செயற்படுத்தி வருகிறோம்.
எமது வர்த்தகர்கள் தாம்,தங்களின் குடும்பம் என்ற சுயநல நோக்குடன் செயற்படாது பொதுநல நோக்கில் இவ்வாறான நலத்திட்டட உதவிகள் வழங்க முன்வந்தமைக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 15 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் வணிகர் கழகத்தினராகிய நாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைச் செய்வோம்; எனவும் அவர் இதன் போது உறுதியளித்தார்.

IMG_4721 IMG_4734 IMG_4745 IMG_4752 IMG_4757

யாழ்.நகர் நிருபர்-