செய்திகள்

சிந்துவெளி நாகரிகமும் கோண்டு மக்களும்

சிந்துவெளி நாகரிகத்தின் விடைகாணமுடியாத புதிர்களுள் முக்கியமானது அதன் சித்திர எழுத்துகள்/குறியீடுகள்.இந்தக் குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ள பொது ஆண்டுக்கு முன்(கி.மு) 3500–1900 ஐச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான முத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அத்துடன் அக்காலகட்டத்தைச்சேர்ந்த கருவிகள்,அணிகலன்கள்,பானை ஓடுகள் போன்றவற்றிலும் அவை இடம் பெற்றுள்ளன.

இவை மொழி சார்ந்த குறியீடுகளா அல்லது குடும்பங்கள்,குலங்கள்,தெய்வங்கள்,மதக்கருதுகோள்கள் போன்றவற்றைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்ட மொழிசாராத குறியீடுகளா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு நிலவுகின்றது.இந்த பொறிப்புகளில் சாராசரியாக 5 குறியீடுகளே இடம்பெற்றுள்ளன.ஆகப் பெரியது 17 குறியீடுகளைக் கொண்டுள்ளது.பொறிப்புகளில் சிறிய அளவிலேயே குறியீடுகள் இடம்பெற்றுள்ளமை,அரிதான பல குறியீடுகள்,குறியீடுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்தன்மை குறைவாக இருத்தல் என்பவற்றை இவை மொழிசாராத குறியீடுகள் என்று வாதாடும் அறிஞர்கள் காரணம் காட்டுகின்றனர்.சீன மொழியில் மிகபெரிய அளவில் அரிதான குறியீடுகள் காணப்படுகின்றதென்றும்,ஆரம்பகால வேர்சொற்குறியீட்டு வரிவடிவம்(logo-syllabic script) பெரிதாக இருந்திருப்பதற்கு அவசியம் இருந்திருக்காது என்றும் மொழி சார்ந்த குறியீடுகளே என்று கருதும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
sam-57

இவை மொழி சார்ந்த குறியீடுகளே என்று கருதும் அறிஞர்களுக்கு இடையில் இவை எந்த மூலமொழியாக இருக்கக்கூடும் என்பதில் கருத்துவேறுபாடுகாணப்படுகின்றது.இவை முந்து திராவிடமொழி என்றும்,இந்தோ-ஐரோப்பிய மொழி என்றும்,முண்டா மொழி என்றும் பல்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இவற்றின் அடிப்படையில் பல ஆய்வாளர்களும் இக்குறியீடுகளுக்கு விளக்கமளிக்க முயன்றுள்ளனர்.ஆயினும் இவற்றை அறிஞர்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை

பெரும்பாலான அறிஞர்கள் அவை முந்து திராவிடமொழியைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதினாலும் அவற்றுக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாசிப்பை கொடுக்கவில்லை.கொடுக்கப்பட்ட சில வாசிப்புகளும் கூட மிகை ஊகங்களாக இருப்பதாகவே மனதுக்குப்படுகிறது.
பண்டை நைல் நதி நாகரிகத்தின் எழுத்துக்களை புரிந்துகொள்வதற்கு உதவிய ரொசெட்டா கல்(Rosetta Stone) போன்ற ஒன்று சிந்துசமவெளி நாகரிகத்துக்கு கிடைக்கும் வரை திட்டவட்டமான வாசிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகு குறைவாகவேயுள்ளன.

தமிழ் நாட்டிலுள்ள செம்பியன் கண்டியூர் என்னும் இடத்தில் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி 2006 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.இக்கற்கோடரியின் காலம் பொது ஆண்டுக்கு முன்னர்(கி.மு) 2000- 1500 என்று கணிக்கப்படுகிறது.இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்று அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.
sam-61

காவிரிக் கழிமுகப் பகுதியில் 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாகவும் ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில்,1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆனைக்கோட்டை முத்திரை (Anaikoddai Seal) சிறிய அளவில் புதிரை விடுவித்துள்ளதாகக் கருத்து உள்ளது.அதன் மூலம் திரிசூலம் போன்ற குறியீடு ‘கோ’ என்று பொருள்பட வாசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிந்துவெளி நாகரிகத்துக்கும் இந்தியாவின் மத்திய பகுதியில் வாழும் திராவிட பழங்குடிகளான கோண்டுகளுக்கும் இடையில் ஆச்சரியமான சில கலாச்சார ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

பசுபதி என்று சேர் ஜோன் மார்ஷலால் கூறப்பட்ட வடிவம் தலையில் அணிந்திருக்கும் எருமைக்கொம்புடனான கிரீடத்தை ஒத்த கிரீடத்தை கோண்டு மக்கள் வழிபடும் அவர்கள் மரபின் முன்னோடி ஞானியான லிங்கோவும் அணிந்துள்ளமை வசீகரிக்கும் உண்மையாகும்.அத்துடன் அவ்வாறான தலைப்பாகையை இன்றும் அவர்கள் தம் கலாச்சார நிகழ்வுகளில் பயன்படுத்துகிறார்கள்.
மற்றையது மொகெஞ்சதரோ நடன மாது சிற்பத்துக்கும் கோண்டுகளுக்கும் உள்ள ஒற்றுமை.அந்த சிற்பத்தின் சிகை அலங்காரம் இன்றும் கோண்டு பெண்களின் சிகை அலங்காரத்துடன் அதிகவேறுபாடற்று அமைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
sam-58

இந்தச் சூழ்நிலையில் அண்மையில் கர்நாடக மாநிலம் ஹம்பியிலுள்ள குகை யொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துருக்களை கோண்டு மொழியினூடாக வாசித்துள்ளார்கள் என்ற செய்தி முக்கியமாகின்றது.இதில் உள்ள 19 எழுத்துருக்களில் 11 எழுத்துருக்கள் சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

“On the goddess Kotamma temple woollen market way there is a rocky roof shelter for shepherds and sheep to stay at night up to morning.”

என்ற வாசிப்பு காட்டும் எளிமை மற்றும் நேரடித்தன்மை மனதுக்கு இந்த வாசிப்பு சரியாக இருக்கலாம் என்பதாக ஓர் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
http://www.thehindu.com/news/national/telangana/gonds-may-have-migrated-from-indus-valley/article6698419.ece

சிந்துவெளி எழுத்துகள் முந்து திராவிட மொழியாக இருக்கலாம் என்று கணித்த அறிஞர்கள் திராவிட மொழிகளில் பழமையான இலக்கியத்தைக்கொண்ட தமிழ் மூலம் அதனை புரிந்துகொள்ளமுற்பட்டமையால் முழுமையாக தமது இலக்கை அடைய முடியாமல் தடுமாறிவிட்டார்களோ என்ற சிந்தனையை தவிர்க்கமுடியவில்லை.இலக்கியப் பழமையை வைத்து மொழியின் பழமையை தீர்மானித்த காரணத்தால் கோண்டி போன்ற பழங்குடிப் பண்டை மொழி கவனத்தைக் கவராமல் போயிருக்கக்கூடும்.
sam-62

ஹம்பி குகை வரிகளை வாசித்துள்ளவரான மொழியிலாளரும்,கோண்டி மொழி மற்றும் கலாச்சார அறிஞருமான மோதிராவண் கங்கலி (Dr. Motiravan Kangali) 2002 இல் கோண்டி மொழிமூலம் சிந்துவெளி எழுத்துகளின் புதிரை விடுவித்து நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.”சைவதி லிபிகா கோண்டிமென் உத்வசக்”(“सैवधी लिपी का गोंडी में उद्‌वाचक”-Saivadhi [Saindhavi?] Lipika Gondimen Udvachak) என்பது அந்த நூலின் தலைப்பு.ஹிந்தி மற்றும் கன்னடத்தில் மட்டுமே கிடைக்கும் இந்நூலை யாராவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் முக்கியமான திறப்பாக அமையக்கூடும்.

முகநூல் தொடர்புகள் மூலம் தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பெற்று நாக்பூரின் வசிக்கும் நூலாசிரியர் மோதிராவண் கங்கலியுடன் பேசியபோது தனது நூல் அறிஞர்களால் விவாதத்துக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது என்று வேதனைப்பட்டார்.எந்தவித முன்கூட்டிய தீர்மானங்களும் இல்லாமல் பல்வேறு சாத்தியங்களையும் பரிசோதிக்கவேண்டிய வரலாற்றுத்துறையில் இவ்வாறான ஒரு நூலை விமர்சனத்துக்கே எடுத்துக்கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.
sam-60

மோதிராவண் கங்கலி (Dr. Motiravan Kangali) தொடர்பு இலக்கம்:0712- 2230669
இத்துடன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான படங்களையும் கங்கலி அவர்களின் சரி பார்த்தல்களுடன் அவரின் நட்புக்குரிய பவான் சயாம் கோண்ட்(Pawan Sayam Gond) முகநூலில் பதிவிட்டிருந்த மொழிபெயர்த்த சில சிந்துவெளி முத்திரைகளின் படங்களையும் இணைத்துள்ளேன்.

கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான சிவேந்திரன்

தினக்குரல் பத்திரிகையில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்.  டென்மார்க் அரசின் ஊடகவிலாளருக்கான கற்கை நெறிக்கான ஃபெலோசிப்பை அவர் பெற்றுள்ளார்.