Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆசிட் வீச்சால் வாழ்க்கையையே இழந்தேன் – கங்கனா ரனாவத் சகோதரி உருக்கம்

ஆசிட் வீச்சால் வாழ்க்கையையே இழந்தேன் – கங்கனா ரனாவத் சகோதரி உருக்கம்

கங்கனா ரனாவத் கம்பீரமான நடிப்பால் பாலிவுட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர். கிடைத்த வாய்ப்புகளில், தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லும் கங்கனாவின் ஆலோசகர், அவரின் சகோதரி ரங்கோலி சண்டல். கங்கனா நடிக்கும் படங்கள், பட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் ரங்கோலி, தனக்கு நேர்ந்த ஆசிட் வீச்சு பாதிப்பு பற்றி பதிந்திருக்கிறார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, ’நான் வெளியிட்டிருப்பது என் கல்லூரிக் கால புகைப்படம். கல்லூரியில் படிக்கும்போது, ஒருவன் என்னிடம் காதலைத் தெரிவித்தான். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள், என் வாழ்க்கை முழுவதும் நிலை குலைந்துவிட்டது. உடம்பின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.

சில அறுவைசிகிச்சைகளுக்குப் பின் கண் விழித்தபோது, என் முகத்தை பார்த்து நானே பயந்தேன். ஏழு மாதங்கள் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். என்னுடைய சகோதரி என்பதற்காக கங்கனாவும் தாக்கப்பட்டாள். ஒருவரின் காதலை ஏற்றுக்கொள்ளாதது அவ்வளவு பெரிய குற்றமா?என்னுடைய உடல் உறுப்புகளைச் சரிசெய்ய ஐந்து வருடங்களில் 54 அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அப்போதுகூட மருத்துவர்களால் என்னுடைய காதை சரிசெய்ய முடியவில்லை.

கண், மார்பு, கழுத்து பகுதிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டன. என் மார்பு பகுதியை, சரிசெய்ய உடலின் பல்வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து ஒட்டினார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என் குழந்தைக்கு பாலூட்ட என்னால் முடியவில்லை. என் ஒட்டுமொத்த குடும்பமும் மனவேதனையிலிருந்து இப்போதுதான் வெளிவர ஆரம்பித்திருக்கிறது.ஆனால், என்மீது ஆசிட் வீசியவன் ஒரே மாதத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.a7748d663ca44055041b814f311c13c6

குற்றம் செய்தவனுக்கு ஒரு மாதம் தண்டனை, பாதிக்கப்பட்டவளுக்கு ஆயுசு முழுக்க தண்டனை. இதுதான் இப்போதைய சமூக நிலையாக இருக்கிறது. என்னைப்போல் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. நியாயம் தேடி போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்கி, நாம் ஏமாறுவதுதான் மிச்சமாக இருக்கிறது. என்னைத் தண்டித்தவனை, நான் தண்டிக்க வேண்டும் என்பதைவிட, இப்போது என் குடும்பத்தின் நிம்மதியே எனக்குப் பெரிதாக இருக்கிறது. அதனால், நான் பாதிக்கப்பட்ட வழக்கு பற்றிக் கவலைப்படுவதில்லை.

என்னைப் பார்ப்பவர்கள், நான் என் அழகை இழந்ததற்காக வருந்துகிறார்கள். நம்முடைய கண்முன் உடலின் மொத்த அழகும் கரைந்து ரத்தத்துடனும், வலியுடனும் உருகும்போது, அழகு பெரிசாகத் தெரியாது. நான் இப்போது, என்னுடைய மனவலிமையை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என் மனவலிமையைத்தான் என்னுடைய அழகாகப் பார்க்கிறேன். கங்கனாவைப் பார்க்கும் பலரும், ‘அவள் மிகத் தைரியமான பெண்ணாக இருக்கிறாள்’ என்பார்கள். அவளின் தைரியத்திற்கு நான் அனுபவித்த வலிகளும் ஒரு காரணம்“ என்று பதிவிட்டிருக்கிறார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *