தலைப்பு செய்திகள்

“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வேதனை

“தற்கொலை செய்யும் அளவுக்கு பிரச்சினைகள்” நடிகை சார்மிளா வேதனை

நல்லதொரு குடும்பம், தையல்காரன், கிழக்கே வரும் பாட்டு, முஸ்தபா மனசே மவுனமா உள்பட பல படங்களில் நடித்தவர் சார்மிளா. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. திருமண உறவும் திருப்தியாக அமையவில்லை. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் சார்மிளா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நான் பணக்கார குடும்பத்தில் பிறந்து இருந்தும் எதிர்பாராத சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து விட்டன. இப்போது என்னிடம் பணம் இல்லை. ஆரோக்கியத்தையும் இழந்து விட்டேன். இந்த மாதிரி விஷயங்கள் என் வாழ்க்கையில் முன்பே நடந்து இருந்தால் தற்கொலை செய்து இருப்பேன். ஆனால் இப்போது சாக முடியாது.

படுக்கையில் இருக்கும் எனது தாயாரை கவனிக்க வேண்டி உள்ளது. மகன் நலனும் முக்கியம். அதனால் தற்கொலை முடிவை எடுக்கவில்லை. எனது கஷ்டம் மகனுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் நிறைய படங்களில் நடித்தேன். இப்போது பெரிய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டால் அவர்கள் தர தயாராக இல்லை. எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்.

எதிர்காலத்துக்காக பணம் சேர்க்காமல் இருந்தது நான் செய்த பெரிய தவறு. சினிமாவில் மும்முரமாக நடித்தபோது ஆடம்பரமாக வாழ்ந்தேன். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று நட்சத்திர ஓட்டல்களில் தங்கினேன். அங்குதான் சாப்பிடுவேன். சம்பாதித்த பணத்தில் பாதிக்குமேல் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் கரைந்தது.

திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை தலைகீழாக மாறியது. எனது வீட்டையும் நிலத்தையும் விற்க வைத்தனர். நான் செய்த பெரிய தவறு வீட்டை விற்றதுதான். அந்த வீடுதான் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. வீடு போன பிறகு மன அழுத்தம் ஏற்பட்டு உடல் எடை குறைந்து எனது ஆரோக்கியமே கெட்டுப் போனது”இவ்வாறு சார்மிளா கூறினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *