Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது: கமல்ஹாசன் பேட்டி

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது: கமல்ஹாசன் பேட்டி

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட சித்தாந்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். உணர்வும் இருக்கும். அதை கெட்டிக்காரத்தனமாக, நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் வென்றே தீரும். என நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

அரசியல் பேச தகுதி என்ன?

நான் அரசியல் பேச, குடிமகன் என்பதுதான் முதல் தகுதியாக நினைக்கிறேன். அரசியல்வாதிகளை திட்டுவது, அவர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதெல்லாம் ஒருவிதமான கும்பல் மனப்பான்மையாகவே எனக்குத் தெரிகிறது. இது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகத்தில் நாம் செய்ய வேண்டியது, நமது கையில் கொடுக்கப்பட்டிருக்கும் கூரான ஆயுதமான வாக்கை, ஊழலில் மழுங்க விடாமல் இருப்பது. இதை செய்யும் முதல் ஆள் ஓட்டுப் போடுபவர்தானே தவிர ஓட்டுக் கேட்பவர் இல்லை.

இலவசங்கள் வேண்டாம்..

முதல் தவறு வாக்காளரிடத்தில் இருக்கிறது. இலவசப் பொருட்களை வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும்போது உன் தலைவன் திருடனாகத்தான் இருப்பான். இதைத்தான் நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். அரசியல் ஒரு தொழிலாக மாறியதால் வந்த பிரச்சினை இது.

அரசியல்வாதிகளுக்கு எளிமை முக்கியம்

கக்கன் பதவியில் இல்லாதபோது எளிமையாக ரிக்‌ஷாவில் வந்திறங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதைப் போல முன்னாள் அமைச்சர்கள் ஏன் இருக்கக்கூடாது என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் கூட எளிமையான அமைச்சர்களை பார்க்க முடிகிறதே.

என்னுடைய கொள்கை சாதிகள் ஒழிய வேண்டும் என்பதே. ஏழை பணக்காரன் என்கிற பேதத்தில் நடக்கும் அநியாயங்களே அதிகமாக இருக்கிறது. அந்த பேதம் இப்போதைக்கு போதும். அதை இன்னும் நாலாக, ஐந்தாக சாதிகள் என பிரித்து வைக்கும் அசிங்கம் வேண்டாம். இன்று சாதிகள் இல்லாதது போல நாம் நடித்துகொண்டிருக்கிறோமே தவிர அதை எதுவும் செய்ய முடியவில்லை.

வாக்குகளை விற்காதீர்கள்..

தேர்தலில் அதிக செலவு தமிழ்நாட்டில் தான் என தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. எது செலவு? கொடி நடவும், பந்தல் போடவும் அதிக செலவு ஆகாது. பணப்பட்டுவாடாவில் தான் அதிக செலவு. அந்த பட்டுவாடா எங்கே நடக்கிறது? எல்லாம் எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பிக்களுக்கும் போவதில்லை. வாக்காளர்களுக்கு தானே செல்கிறது. விலை பேசிவிட்டார்கள். எனவே அமைதியாகத்தான் இருக்க வேண்டும். வாக்குகளை விற்றுவிட்டால் அமைதியாகவேண்டியதுதான்.

சாமானியர்கள் பணம் வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் எங்கோ மூலையில் குடிசையில் இருப்பவர்கள் அல்ல. டிடிஆர் கையில் பத்து ரூபாய் தந்தால் டிக்கெட் கிடைத்துவிடும் என்று நினைப்பவரும் ஊழல்வாதியே. பிளாக் டிக்கெட் வாங்குபவரும் ஊழல்வாதியே.

உடனே எல்லோரும் சந்நியாசியாகிவிட முடியுமா என்பார்கள். யதார்த்தத்தில் நான் நேர்மையாக இருக்கிறேன். நடைமுறையில், முயன்றால் நேர்மையாக இருப்பது சாத்தியமே. கூட்டமாக சென்று கேள்வி கேட்பது இருக்கட்டும், முதலில் மாற்றம் தனிநபரிலிருந்து தொடங்க வேண்டும்.என்னால் முடியாததை நான் கேட்கவில்லை. நான் ஒழுங்காக வரி கட்டிவிட்டுத்தான் மற்றவர்களை கட்டச் சொல்லி கேட்கிறேன். எனவே இது சாத்தியம் தான்.

‘எனது குரல் சர்வாதிகாரத்துக்கு எதிரானது’

அரசியலில் ஏற்படும் அநியாயம், சர்வாதிகாரத்துக்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். ஆராய்ச்சி மணி அடிக்க பசுமாடு இல்லையென்றால் நான் அடிக்கிறேன். அந்த மணி அடிக்கும்போது அதற்கான ஆதரவு இப்போதைக்குப் போதுமானது. ஒரு அடியெடுத்து வைக்க அது போதும். ஆனால் அதுவே பிரச்சினைகளை தீர்த்துவிடாது.

‘வாய்ச்சொல் வீரர்கள் வேண்டாம்’

ஏழ்மையை போக்க முடியும் என உலக பொருளாதார வல்லுநர்கள் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் யாரும் இன்னும் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் டிரம்ப் போல, வாய் சவடால் விடும் ஒருவரை போற்றிக்கொண்டிருக்கிறோம். சவடால் பேச்சு ரவுடிகள் செய்யக்கூடிய விஷயம். அமைதியாகப் பேசி, விமர்சனங்களை எதிர்கொண்டு, என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவர்கள் தான் பொறுப்புள்ளவர்கள்.

ஜெ. புகைப்படம் எதற்கு?

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு என்பது ஒரு தனிநபரைப் பற்றியது அல்ல. ஒட்டுமொத்த கூட்டத்தின் உதவியின்றி அந்த ஊழல் நடந்திருக்காது. ஒருத்தர் தான் தவறு செய்தார் என்றால் ஏன் இன்னும் அவரதை புகைப்படத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்? இதுதானே எதிர்கட்சிகள் கேட்பதும்? இது எல்லாரும் சேர்ந்து செய்த தவறு. வாக்காளர்கள் உட்பட. யாராவது திருந்த வேண்டாமா. முதலில் வாக்காளர்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.

நான் சொல்வது நிபுணர்களின் கருத்து அல்ல. சாமானியனாக்த்தான் கருத்து சொல்கிறேன். ஜனநாயகத்தின் அழகைப் பற்றி அதன் நிபுணர்கள் பேசும்போது, ஊழல் அப்படித்தான் நடக்கும். அதுதான் ஜனநாயக்த்தின் அழகே என்கிறார்கள். இதை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்கிறார்கள். நான் சொல்ற கருத்து தவறு என்றால் அதைத் திருத்திக்கொள்ள நான் தயார். யாராவது என்னை சமாதானப்படுத்தட்டும். மக்களை நான் சமாதானப்படுத்துகிறேன். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை.

அரசியல் வெறுமை இல்லை:

தமிழகத்தில் அரசியல் வெறுமை இல்லையென்றே நினைக்கிறேன். மக்கள் என்ன செம்மறி ஆடா? ஏன் மேய்ப்பனை தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? தலைமை பொறுப்புக்கான தகுதியான ஆளை நீங்கள் நியமனம் செய்யுங்கள். அதற்கான தகுதி கொண்ட ஆள் தான் தேவை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த நபரை தலைவா என போற்றி, கூச்சலிட்டு மீண்டும் ஏகாதிபத்தியத்தை எடுத்து வராதீர்கள்.

என் கருத்தை வெளியில் சொல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. நான் அரசியலில் இல்லை. அதற்காக அதுபற்றி கருத்தே இருக்கக் கூடாது என சொல்வது தவறு. அப்படிப்பார்த்தால் சினிமா விமர்சனமே இருக்கக்கூடாது. கருத்தை சொல்பவர்கள் களத்தில் வரவேண்டும் என என்ன அவசியம் இருக்கிறது? விமர்சகர்களோ, விமர்சனக்குழுவோ திரைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது அவசியம் தானே. அது போல கருத்தியல் ரீதியாக இயங்குவது அவசியம். களத்துக்கு வர வேண்டியதில்லை.

திராவிடம் என்ற சொல் பிரபந்த காலத்திலிருந்தே இருக்கிறது. அதை ஒன்றுமே செய்ய முடியாது. அதற்கான தலைமையை மக்கள் ஏற்கிறார்களா, மனிதர் ஏற்கிறாரா என்பதைப் பொருத்தே அமையும்.

‘திராவிடம் நிலைத்திருக்கும்’

திராவிடத்தை எதுவும் செய்ய முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட சித்தாந்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். உணர்வும் இருக்கும். அதை கெட்டிக்காரத்தனமாக, நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் வென்றே தீரும். தேசியக் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் திராவிடத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அது ஒரு மொழியைப் போல. நம் இன மானம் அது. குஜராத்தி என்பதில் மோடிக்கு இருக்கும் பெருமை, திராவிடன் என்பதில் எனக்கும் இருக்கிறது.

என் கருத்துக்களை நான் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்பேன். அதை தொந்தரவாக எடுத்துக் கொள்பவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நன்றி: த இந்து


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *