Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷ் 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் தனுஷ் 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். எங்களுக்கு வயதாகிவிட்டதால், அவர் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இருதரப்பினரும் தனுஷின் பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே நடிகர் தனுஷின் பள்ளி மாற்று சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.
அடையாளங்களை குறிப்பிடவில்லை
நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்கம், மச்சம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், மேலூர் தம்பதியர் கூறியுள்ளது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. எனது இடது காரை எலும்பின் மேல் ஒரு மச்சமும், இடது முழங்கையில் ஒரு தழும்பும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எனது உடலில் அதுபோன்ற எவ்வித அங்க அடையாளமும் இல்லை. என்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு மேலூர் தம்பதியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேரில் ஆஜராக உத்தரவு
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே நடிகர் தனுஷ் 28-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
N5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *