Search
Wednesday 8 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியமைத்தார் நடிகர் விஷால்

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியமைத்தார் நடிகர் விஷால்

நடிகர் விஷால், திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இதையடுத்து அவர் தனது ரசிகர் மன்றத்தை, அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கமாக மாற்றியமைத்துள்ளார். இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்துக்கொண்டார்கள். இந்த கூட்டத்தில் தனது ரசிகர் மன்றத்தை ரசிகர்கள் நற்பணி இயக்கமாக மாற்றியதை விஷால் அறிவித்தார். இந்த நற்பணி இயக்கத்தின் தலைவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளார். இவர், ஏற்கெனவே விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர்.

அப்போது விஷால் கூறுகையில், “நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள், பாடங்கள் கிடைத்தன. திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம்.

ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி வந்த மாதிரி உணர்ந்தேன். உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை. இந்த இடைவெளி தவிர என் தரப்பிலும் மன்றச் செயல் பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன. அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன். என் ரசிகர் மன்றம். இனி ‘அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது.

அப்படிப்பட்ட வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம். நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும் இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போக வேண்டும். இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது. அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார். இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்து வந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம். முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன். இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது. இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும். மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.

நடிகர் சங்கத் தலைவர்களான சரத்குமார், ராதாரவி மீது எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இருவர் மீதும் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நடிகர் சங்க இடம் 19 கிரவுண்ட்.. ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பலரது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி சங்கம் வளர்ந்து கட்டடம் உருவானது. அந்த இடம் இன்று மயானம் போல காட்சி தருகிறது. அதைக் கட்டச்சொல்வது என் தனிப்பட்ட நலன் கருதியல்ல சுமார் 2500 சிரமப்படும் நடிகர்களுக்காத்தான். அவர்களின் குடும்பங்களின் சந்தோஷத்துக்கு ஏதாவது வழிபிறக்காதா என்கிற எண்ணத்தில்தான். எனக்கும் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒன்றுமில்லை.

சங்கத்தின் பொறுப்பிலுள்ளவர்கள், பலபேர் மத்தியில் என்னை நாய் என்கிறார்கள் ராதாரவி இழிவாகப் பேசினார். என்னைக் கடனை அடைக்கச் சொன்னார் நடிப்பைக் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒவ்வொன்றாக நான் முடிப்பதற்குள் அவர்கள் ஏப்பம் விட்டு விடுவார்கள். 2500 குடும்ப மகிழ்ச்சிக்காகத்தான் இதைப் பேசுகிறேன். ஊழல் இல்லை என்கிறார்கள். ஏன் அவர்கள் சொன்ன தேதியில்கூட கட்டடம் கட்டவில்லை. இந்த முறையாவது தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடக்கட்டும். நாடக நடிகர்களில் தனிப்பட்ட யாரையும் எனக்குத் தெரியாது.ஆனாலும் அவர்களுக்காகப் போராடுகிறோம். எனக்கு நாற்காலி ஆசை இல்லை. பொறுப்பு கொடுத்தால் ஏற்றுச் செயல்படுவேன். என் தரப்பில் நியாயமில்லாமலா சிவகுமார், நாசர், ஆர்யா, ஜீவா, பொன்வண்ணன், மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்றவர்கள் நான் சொல்வதை ஆதரிக்கிறார்கள். எனக்காக அல்ல நியாயத்துக்காக ஆதரிக்கிறார்கள். இவ்வாறு விஷால் பேசினார்.

கமல், விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷாலும் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *