செய்திகள்

சிரானி பண்டாரநாயக்க நீக்கப்பட்ட முறை தவறானது: சுமந்திரன்

பிரதம நீதியரசராகவிருந்த சிராணி பண்டாரநாயக்க சட்டத்தின்படி அப்பதவியிலிருந்து நீக்கப்படவும் இல்லை, மொஹான் பீரிஸ் சட்டத்தின்படி அப்பதவிக்கு நியமிக்கப்படவும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிரதம நீதியரசாகவிருந்த மொஹான் பீரிஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் மேலும் கூறுகையில்;

அரசியலமைப்பின் 107 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பிரதம நீதியரசர் நியமிக்கப்படுகின்றார். ஜனாதிபதியின் மேற்படி சிபாரிசுக்கு பாராளுமன்ற பேரவை ஒப்புதல் வழங்கவேண்டும். அவ்வாறு ஒப்புதல் வழங்காத நிலையில் ஜனாதிபதி தனியே நியமித்தால் அந்நியமனம் தவறானதாகும். அதேபோல் நீதியரசர் ஒருவரை ஜனாதிபதி தனித்து நீக்க முடியாது. நீதியரசர் ஒருவரை நீக்குவதற்குத் தேவையான பிரேரணையை நிறைவேற்றி பாராளுமன்றம் அவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். இது விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் இல்லாதுவிட்டால் இது செல்லுபடியற்றதாகிவிடும். இதுதான் நடைமுறை.

அந்தவகையில் பிரதம நீதியரசராகவிருந்த சிராணி பண்டாரநாயக்கவை நீக்கவேண்டுமென்ற பிரேரணை முன்வைக்கப்படவில்லை. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்கக் கோரும் யோசனையே ஒழுங்குப்பத்திரத்தில் இருந்தது. எனவே சிராணி பண்டாரநாயக்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான வழிமுறை பின்பற்றப்படவில்லை.எனவே பிரதம நீதியரசர் பதவியிலிருந்து சிராணி பண்டாரநாயக்க சட்டப்படி நீக்கப்படவும் இல்லை, அப்பதவிக்கு மொஹான் பீரிஸ் சட்டப்படி நியமிக்கப்படவும் இல்லை.

இதேவேளை புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சி பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 94 ஆவது இடத்தில் சிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக்கப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சியினருக்குத் தெரியாதா? அதனைவிட இந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அதாவது பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் மக்களும் விரும்பி ஆணை வழங்கியுள்ளார்கள்.

இதேவேளை கடந்த இரு வருடங்களாக மொஹான் பீரிஸை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கவில்லை. அவருக்கான வரவேற்பைக் கூட வழங்கவில்லை. மொஹான் பீரிஸை சட்ட சமூகம் புறக்கணித்திருந்தது. ஆனால் சிராணி மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது சட்டசமூகமே என்றும் இல்லாதவாறு திரண்டு நின்று வரவேற்கிறது என்றார்.