செய்திகள்

சிரியாவின் பால்மைரா நகரில் 2 முக்கிய நினைவிடங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் தரைமட்டமாக்கினர்

தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தெரிவித்துவந்த அச்சத்தையும், ஐயப்பாட்டையும் மெய்ப்பிக்கும் வகையில் சிரியாவின் பால்மைரா நகரில் உள்ள முஹம்மது நபியின் மருமகனார் இமாம் முஹம்மது அலியின் உறவினர் மற்றும் அந்நகரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இஸ்லாமிய கல்வியாளர் ஒருவரின் சமாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடி வைத்து தகர்த்து, தரைமட்டமாக்கி உள்ளனர்.

பால்மைரா நகரின் வடக்கே பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவந்த முஹம்மது நபியின் மருமகனார் இமாம் முஹம்மது அலியின் உறவினரான முஹம்மது பின் அலி என்பவரின் சமாதியையும், பால்மைரா நகரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இஸ்லாமிய கல்வியாளரான நிஸார் அபு பஹா எடினி என்பவரது சமாதியையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடி வைத்து தகர்த்து, தரைமட்டமாக்கி உள்ளதாக சிரியா நாட்டின் அருங்காட்சியகம் மற்றும் பழங்கால கலைப்பொருட்கள் பராமரிப்புத்துறை இயக்குனரான மாமவுன் அப்துல்கரிம் என்பவர் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு பால்மைரா நகரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றிய வேளையில் வரலாற்று சிறப்பும், பழங்கால தொன்மையும் வாய்ந்த அந்நகரில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இந்த தீவிரவாதிகளால் ஆபத்து நேரலாம் என வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்திருந்தது, நினைவிருக்கலாம்.