செய்திகள்

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் – இராணுவம் இடையே கடும் சண்டை! 34 பேர் பலி

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே நடைபெற்ற கடும் சண்டையில் வியாழக்கிழமை 34 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது:

சிரியாவின் டெயிர் எஸ்ஸார் நகரில் ராணுவ விமான நிலையத்துக்கு அருகே அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவான படையினருக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை இரவு முதல் கடும் சண்டை நடந்து வருகிறது.

இதில் 19 அரசு ஆதரவுப் படையினரும், 15 ஐ.எஸ். பயங்கரவாதிகளும் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர்.

டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நகரான அங்கு ராணுவச் சாவடி ஒன்றை மனித வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர்.

அங்கு பிடிபட்ட 4 அரசுப் படையினரின் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.

அந்த ராணுவச் சாவடியைக் கைப்பற்றியுள்ளதன் மூலம், ராணுவ விமான நிலையத்தை பயங்கரவாதிகள் மேலும் நெருங்கியுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை தொடர்கிறது என்றார் அப்தெல் ரஹ்மான்.