சிரியாவில் குளோரின் வாயு தாக்குதலில் குழந்தைகள் இறக்கும் வீடியோவை பார்த்து கண்ணீர் சிந்தியது ஐ.நா
சிரியாவின் வடபகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற குளோரின்வாயு தாக்குதல் குறித்த ஓளிநாடாவை பார்த்த ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் கண்ணீர்சிந்தியுள்ளனர்.
குளோரின் வாயு தாக்குதுலில் சிக்கிய 4வயதிற்குட்பட்ட 3 குழந்தைகளை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு மருத்துவர்கள் தோற்றுப்போவதையே குறிப்பிட்ட வீடியோ காண்பித்துள்ளது.
குறிப்பிட்ட வீடியோ ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை பிரதிநிதிகளை மிகவும் பாதித்துள்ளதாக சிரியா அமெரிக்க மருத்துவசங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தாங்கள் பார்த்த மற்றும் கேட்ட விடயங்களால் பாதிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் சிலர் அழுதனர்.பலர் சிரியா அரசாங்கத்தின் குளோரின் தாக்குதல்களை கடுமையாக கண்டித்ததுடன்,இதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.பல இராஜதந்திரிகள் இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணையை கோரினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் இதற்கு காரணமானவர்கள் நிச்சயமாக பதிலளிக்கவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாதுகாப்புசபை கூட்டத்தில் எவர் கண்ணும் ஈரமாகாததை நான் காணவில்லை,இவ்வாறான ஆதாரங்களை குற்றவாளிகளை தண்டிப்பதற்காக சேகரித்துவருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 16 ம்திகதி சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சர்மின் என்ற கிராமத்தின் மேலாக திடீரென ஹெலிக்கொப்டர்கள் தோன்றியதாகவும்,அதன் பின்னர் ஏதோ சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரத்தின் பின்னர் சுவாசிக்கமுடியாமல் அவதிப்பட்ட பலர் மருத்துவமனைக்கு வந்ததாகவும் சிரியா மருத்துவர்கள் பாதுகாப்பு சபைக்கு தெரிவித்துள்ளனர்.