செய்திகள்

சிரியாவில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விபரங்கள் வெளியாகலாம்

சிரியாவில் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து ஆராய்ந்துவருவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழை இதனை குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் சிரியாவில் இழைக்கப்படும் அநீதிகள் பல மடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிரியாவில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய ஐந்து பட்டியலை தயாரித்துள்ளதாகவும்,இதில் அங்கு செயற்படும் பல குழுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியா அரசபடையினர்,ஐஎஸ் அமைப்பு மற்றும் அல் நுஸ்ரா முன்னணி ஆகியவர்களே அதிகளவில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பெயர்விபரங்களை வெளியிடுவதில்லை என்ற நீண்ட கால நிலைப்பாட்டை தளர்த்தவேண்டியிருக்கும்,பெயர் விபரங்களை வெளியிடாமலிருந்தால் அது குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவதற்கு உதவும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பட்டியலில் எத்தனை பேர்இடம்பெற்றுள்ளனர் என்ற விபரத்தினை ஆணைக்குழுவினர் வெளியிட மறுத்துள்ள போதிலும் 200 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குறித்த விபரங்களை அந்த நாடுகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும், அந்த நாடுகள் தங்கள் பிரஜைகளை தண்டிக்க இதுஉதவும் எனவும் குறிப்பிட்டுள்ள விசாரணையாளர்கள், குற்றவாளிகளின் பெயர்விபரங்கள் அடங்கிய நான்கு ஆவணங்களை ஏற்கனவே மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கிளர்ச்சிக்காரர்களின் பகுதிகள் மீது விமான தாக்குதலை மேற்கொள்ளும் சிரியா அரசாங்கம் மீது இதன் போது அப்பாவி பொதுமக்களை கொல்வதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களில் சிரியாவில் 220.000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.