செய்திகள்

சிரியாவுக்கு மேலும் 250 சிறப்பு படைப்பிரிவினரை அனுப்ப ஒபாமா முடிவு

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டுக்கு மேலும் 250 சிறப்பு ராணுவப் படைப்பிரிவினரை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.ஜெர்மனி நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போர் மற்றும் அங்குள்ள அரசியல் நிலவரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உடன் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட சிரியா அரசு ஒப்பந்தத்தை மீறியவகையில் உள்நாட்டுப் போராளி குழுக்கள் மீது விமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக ஒபாமா கவலை தெரிவித்தார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் அதிருப்தி படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த போர்க்கலை வல்லுனர்களை சிரியாவுக்கு அனுப்பிவைத்து, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அவ்வகையில், அமெரிக்காவை சேர்ந்த 50 துருப்பு சிறப்பு ராணுவப் படைகள் சிரியாவில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், சிரியாவில் தற்போது அதிகரித்துவரும் அரசு பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் அங்கு மேலும் சில அமெரிக்க படைவீரர்களை அனுப்பி வைக்க வேண்டும் என ஒபாமா- ஏஞ்சலா மெர்க்கல் இடையிலான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, சிரியாவுக்கு மேலும் 250 சிறப்பு ராணுவப் படைப்பிரிவினரை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.