Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்து சமுத்திரத்தில் ஓர் பாலஸ்தீனமாகத் திகழும் தமிழீழம்

இந்து சமுத்திரத்தில் ஓர் பாலஸ்தீனமாகத் திகழும் தமிழீழம்

செ. ஐங்கரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர், இலங்கை அரசுக்கு மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள 2015ம் ஆண்டு புரட்டாதி மாதத் தீர்மானத்திற்கு மேலும் 2 வருடங்கள் காலநீடிப்பினைச் செய்து உள்ளது.

40வது கூட்டத்தொடரில் கலந்து கொண்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர், சர்வதேச முன்னெடுப்புக்களை முற்றாக மறுதலித்து உள்நாட்டு அணுகுமுறையையே பின்பற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

இலங்கை வெளியுறவு அமைச்சரின் தீர்க்கமான கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பில் இலங்கை தொடர்பான நடவடிக்கைகள் தமிழர்;களுக்கு சாதகமாக அமையப் போவதில்லை என்பதனைச் சுட்டி உள்ளது. சில முக்கிய மறுதலிப்புக்களாவன:

1. 2008-2009 காலப்பகுதியில் சுமார் 40,000 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் 40வது மனித உரிமை அமைப்பில் மறுதலித்து உள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் அறிக்கையின் எப்பகுதியிலும் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றோ, தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர் என்றோ குறிப்பிடப்படவில்லை. இவை இனப் படுகொலைகளை ஆவணப்படுத்தாது மறைப்பதற்கான நடவடிக்கைகளே ஆகும்.
2. வடக்கு கிழக்கில் உள்ள பாரிய மனிதப்புதைகுழிகளுக்கும், காணாமல் போயுள்ள தமிழ் உறவுகளுக்கும் ஆதாரம் இல்லை அவை தவறானவை என மறுத்து உள்ளார். இதற்கு மன்னார் புதைகுழிக்கான அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை விபரித்து உள்ளார். இது உண்மையில் நம்பகத்தன்மை அற்ற செயற்பாடாகும்.
3. கலப்பு நீதிமன்றப் பொறிமுறையினை ஏற்கமாட்டோம் எனக் கூறியுள்ளார்.
4. இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் எனத் தவறான புள்ளிபவிபரங்களை வெளியிட்டுள்ளார்.
5. காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டமை தமிழர்களை முட்டாளாக்கும் செயற்பாடாகும். இங்கு காணாமல் போன படைவீரர்களின் குடும்பங்களுக்கே நிவாரணம் அளிக்கப்படுகின்றது.
6. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி எதனையும் செய்ய முடியாது எனவும் மேலும் ⅔ பங்கு பெரும்பான்மை தேவை எனவும் கூறி உள்ளார்.
ஆனால் இலங்கையின் அரசியலமைப்பே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும். மேலும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் பிரதேச பெரும்பான்மையினரான தமிழ் மக்கள் சுயாட்சியினை கோருவதற்கு இதுவே அடிப்படைக் காரணம். எனவே தமிழீழத்திற்கான சட்ட ரீதியான தேவையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெளிவாக விபரித்து உள்ளார்.
7. இலங்கை அரசு தனது நலனையே முதலில் முன்னெடுக்கும். அதாவது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினையே மேற்கொள்ளும். தமிழர்கள் தொடர்ந்தும் உள்நாட்டில் அரசியலமைப்பாலும், இராணுவத்தாலும் அடக்கப்படுவர்.

இனப்படுகொலை செயற்பாடுகளுக்குப் பின், அதனை மறுத்தல் இனப்படுகொலையின் முக்கிய அம்சமாகும். இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ஆற்றிய உரையில் அவதானிக்க முடிகின்றது. தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையில் இலங்கை அரசாங்கமே நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதால், இலங்கை அரசின் மனித உரிமை நடவடிக்கைகளை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைத்தலைவி கூறுவது தமிழ் மக்களால் தொடர்ந்தும் சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைத்தலைவி இலங்கை அரசிற்கு பின்வருவன அமைவதற்கு எதிர்வரும் 2 வருட காலத்திற்கு உதவுவதாகக் கூறுகின்றார்.

1. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் தீர்மானம் 40/1ஐ அமுல்படுத்துவதில் உதவியும் கண்காணிப்பும் மேற்கொள்ளல்.
2. கலப்பு நீதிமன்றம் அமைத்து

a . போர்க்குற்ற விசாரணைகள் செய்தல்
b . சர்வதேச மனித உரிமை நீதியினை சித்திரவதைகள், காணாமல் போனவர்கள், போர்க்குற்;றச்சாட்டுகளுக்கு பெற்றுத் தரல்.
3. மனித உரிமைகளை மீறிய இலங்கை இராணுவத்தை சேவையில் இருந்து அகற்றல்.
ஆனால் இலங்கை அரசாங்கம், சனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட இவ்வணுகுமுறைகளை நிராகரித்து உள்ளனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் செயற்பாடுகள் தமிழருக்கு நீதியை பெற்றுத் தருவதில் எவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளது என்பதனை பின்வருமாறு கணக்கிடலாம்.

a . ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் செயற்பாடும் அது தொடர்பாக இலங்கை அரசின் செயற்பாடும் மிகவும் மந்த கதியிலேயே உள்ளது. சுமார் 10 வருடங்கள் கடந்தும் ஆக்க பூர்வமான நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வளவு காலநீடிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இது குற்றவாளிகளை பாதுகாக்கும் அணுகுமுறையாகவே கொள்ளல் வேண்டும்.
b. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் அறிக்கையின் எப்பகுதியிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் பொதுமக்கள் எனக் குறிப்பிடப்படவில்லை. பொதுவான சொற்பதம் இலங்கை அரசு தொடர்ந்து கட்டமைப்பு இன அழிப்பினை மேற்கொள்ள வழிகோலுகின்றது. உதாரணமாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்ட வடக்கிற்கான உட்கட்டமைப்பு விரிவாக்கம் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றது. இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையே ஆகும்.
c . இலங்கை சனாதிபதி, பிரதமர், இலங்கை வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் தீர்மானத்தை நிராகரித்த நிலையில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கலப்பு நீதிமன்றம் தொடர்பாக தமிழ் மக்கள் கதைத்தால் 1983ம் ஆண்டு நடைபெற்றது போல் அரச ஆதரவுடனான இனக்கலவரம் ஏற்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்களின் நடவடிக்கைகளை இலங்கை அரசு, அரசியல் யாப்பை மீறியதாக கட்டுப்படுத்தும் சூழல் உள்ளது. இதுவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் கூறிய உள்நாட்டு அணுகுமுறையாகும்.
d . யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் மனித உரிமை பேரவையின் செயலாக்க நடைமுறை என இலங்கை அரசு ஏமாற்றுகின்றபோது, இலங்கை அரசின் மனித உரிமைச் செயற்பாடுகளை வரவேற்பதாகக் கூறுவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்றது.
e . ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் இலங்கை தொடர்பான செயற்பாடுகளின் நடுநிலைத்தன்மை சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினையே ஐக்கிய நாடு தனது அமைதி காக்கும் படையில் இணைத்து உள்ளது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை இலங்கை இராணுவத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்களை அகற்றும் செயற்பாட்டினை நகைப்பிற்கு இடமாக்கி உள்;ளது. ஏற்கனவே குற்றங்கள் மேற்கொண்டு 10 வருடங்கள் கடந்துவிட்டன. குற்றமிழைத்த சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் பலரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே காலம் தாழ்த்திய அணுகுமுறை குற்றவாளிகளைத் தண்டிக்காது.
எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் மீளவும் பழையநிலைக்;கு, இலங்கையை இட்டுச் சென்றுள்;ளது.

இலங்கை அரசினதும் அதன் அரசியலமைப்பினதும் கட்டமைப்பு, இலங்கை அரசு புரிந்த குற்றங்களை வெளிக்கொணரத் துணைபோகாது. எனவே இலங்கை அரச கட்டமைப்புக்கு அப்பாலான பொறிமுறையையே ஈழத்தமிழர் தமது நீதிக்காக எதிர்நோக்குகின்றனர். 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமும் இத்தகையதே. இதனையே 13A அமுலாக்கம் என ஐ. நா. மனித உரிமை அவையில் இந்தியப் பிரதிநிதி வலியுறுத்தியிருந்தார். அதாவது இலங்கையின் தமிழர்களுக்கான நீதி வழங்கல் செயன்முறையில் இந்திய அணுகுமுறையும் உள்ளடங்கல் அவசியம் என்பதனை இது காட்டுகின்றது.

ஐ. நா. மனித உரிமை அவையில் பாகிஸ்தான் பிரதிநிதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் அளிக்கப்படல் வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டிருந்தார். இது அண்மையில் காஷ்மீர் மக்களின் வழிடுதலைப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு வலுச் சேர்க்கின்றது.

இலங்கை அரசு வடக்கு கிழக்கில் சனநாயக ஆட்சியை முடுக்கி, ஆளுநர் ஆட்சியையே மேற்கொள்கின்றது. இது இனப்படுகொலைகளை மூடிமறைப்பதற்கும், சிங்கள பௌத்தமயமாக்கலுக்கும் உதவுகின்றது. ஐ. நா. மனித உரிமை அவைக்கு இலங்கை அரசின் பிரதிநிதியாகச் சென்ற வடமாகாண ஆளுநர், கலப்பு நீதிமன்றம் தொடர்பாக பத்திரிகை வாயிலாக எச்சரிக்கையினைத் தமிழ்மக்களுக்கு இட்டுள்ளார்.

எனவே ஐ. நா. மனித உரிமை அவையின் 2019 பங்குனித் தீர்மானம், ஈழத்தமிழ் மக்களின் தாயகக் கோரிக்கையினை வலுவடையச் செய்துள்ளது. தமிழினப் படுகொலைக்கான நீதிச் செயற்பாடுகளுக்கான சுயாதீன நீதி ஆயத்தை தமிழ்மக்கள் உருவாக்க வேண்டியது முக்கியமானது. அதற்கு தமிழீழம் சட்டபூர்வமானதாக உருவாக்கப்படல் வேண்டும். இந்து சமுத்திரத்தில் ஓர் பாலஸ்தீனமாகத் தமிழீழம் திகழ்கின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *