Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சூடான் ஜனாதிபதி கைது : இராணுவ ஆட்சி

சூடான் ஜனாதிபதி கைது : இராணுவ ஆட்சி

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் தோன்றிய சூடான் பாதுகாப்பு அமைச்சர் அவாத் இப்ன் ஊஃப் மூன்று மாத காலத்துக்கு அவசர நிலை நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.

அவாத் இப்ன் ஊஃப் மேலும் கூறுகையில், ராணுவத்தின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டு காலம் நாட்டின் ஆட்சி இருக்குமென்றும், இதனை தொடர்ந்து தேர்தல்களைத் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

1989-லிருந்து ஆட்சி செய்து வரும் அதிபர் பஷீருக்கு எதிராக பல மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது.

”ஒமர் அல் பஷீரின் ‘ராஜ்ஜியம்’ முடிவுக்கு வந்தது. தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்” என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

”மேலும், மோசமான மேலாண்மை, ஊழல், நீதியின்மை காரணமாக நாடு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது” என குறிப்பிட்டார்.

சூடான் அரசமைப்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்லைகள் காலவரையின்றி மூடப்படுவதாகவும் தமது நாட்டின் வான் எல்லை 24 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே சர்வதேச பிடி ஆணை வழங்கியிருக்கிறது. போர் குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் சூடானின் மேற்கு டர்ஃபர் பிராந்தியத்தில் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டியிருக்கிறது.

இருப்பினும், பஷீரின் கைதுக்கு பிறகு என்ன நடக்கும் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.

சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம், ராணுவ தலைமையகம் மற்றும் பஹீரின் தனி வீட்டில் வியாழக்கிழமை காலையில் ராணுவ வாகனங்கள் நுழைவதை கண்டதாக ஏ எஃப் பி செய்தி முகமை செய்தி வெளியிட்டது.

அதிபர் கைது செய்யப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி

அரசின் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்ச்சிகள் இடையில் குறுக்கீடு செய்யப்பட்டு ராணுவம் விரைவில் ஒரு அறிக்கை வெளியிடவுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் மத்திய கார்டோமில் லட்சகணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி ”பஷீர் அரசு வீழ்ந்தது, நாம் வென்றுவிட்டோம்” என கோஷமெழுப்பியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் பின்னணி என்ன?

வாழ்வாதார செலவு உயர்வை தொடர்ந்து போராட்டங்கள் உச்சம் பெற்றன. இதையடுத்து மக்கள் அதிபரை பதவி விலகக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டங்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாக போராட்டக்குழுக்கள் அரசை சாடின.

கடந்த டிசம்பர் முதல் உண்டான அமைதியின்மையை அடுத்து பொதுமக்கள் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனித உரிமை கண்காணிப்பகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என கூறுகிறது.

பிப்ரவரி மாதம் ஒரு கட்டத்தில் அதிபர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஷீர் நாட்டில் அவசர நிலை அறிவித்தார்.

ஒமர் அல் பஷீர்படத்தின் காப்புரிமைREUTERS

Image captionஒமர் அல் பஷீர்

யார் இந்த ஒமர் அல் பஷீர்?

முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் 1989-ல் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார்.

அவரது ஆட்சி உள்நாட்டு போருக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல் 2005-ல் முடிவுக்கு வந்தது.2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.

நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள டர்ஃபர் பிராந்தியத்திலும் மற்றொரு உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. போர் குற்றங்களை ஒருங்கிணைத்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியுள்ள போதிலும் 2010 மற்றும் 2015 தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.

ஒமர் அல்-பஷீர் மீதான கைது ஆணை அவருக்கு சர்வதேச பயணத்தடையை உண்டாக்கியது. இருப்பினும் ராஜாங்க ரீதியாக அவர் எகிப்து, செளதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் கொண்டுள்ளார். ஜூன் 2015-ல் தென் ஆப்ரிக்காவில் நீதிமன்றமொன்று கைது ஆணை பிறப்பிக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தநிலையில் அவசர அவசரமாக தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் கிளம்பினார். BBC TAMIL


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *