Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் தரப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை…!

தமிழ் தரப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை…!

ருத்திரன்-

இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் உரிமைக் கோரிக்கையை தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் விழுந்திருந்தது. மாறிவந்த சர்வதேச சூழலை அதாவது இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றை மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களது அடிப்படைப் பிரசடசனைகள் தொடக்கம் நிரந்தர தீர்வு வரை தீர்க்க கூடிய வாய்ப்ப்பிருந்தும் அதில் கூட்டமைப்பு தலைமையின் இராஜதந்திரம் தோற்றுவிட்டதாகவே கருதவேண்டியுள்ளது. மாறாக இலங்கை அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இணை அணுசரனை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தைக் கூட நடைமுறைப்படுத்தாது மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் பெற்றிருந்தது. இந்தநிலையில் கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் மக்களது நாளாந்த பிரச்சனைகளைக் கூட தீர்ப்பதற்கு தயக்கம் காட்டி வரும் நிலையையே உள்ளது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் ஜனநாயக ரீதியாக மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. தமது குடும்பங்களை பிரிந்து, வீடுகளை விட்டு தமக்கு கிடைக்க வேண்டிய நீதி, நியாயத்திற்காக அந்த மக்கள் வீதியோரங்களில் இருந்து போராடுகின்ற நிலையிலும், நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த அரசாங்கம் அந்த மக்கள் விடயத்தில் குறைந்தபட்சம் மனிதபிமான ரீதியில் கூட நடந்து கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு உதவிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து வருகின்ற போதும், இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை. அரசாங்கத்தினதும், தமது தலைமைகளினதும் செயற்பாடுகளால் விரக்தியடைந்த மக்கள் தாமாகவே தமது உரிமைக்காகவும், நீதிக்கதகவும் ஜனநாயக போராட்ட களங்களை உருவாக்கியுள்ளதுடன் தமக்கான ஒரு மாற்றுத் தலைமை பற்றிய தேடல்களையும் ஆரம்பித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறுகளை சுட்டிக்காட்டி தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் வலியுறுத்தி, மக்கள் எழுச்சியுடன் கூடிய எழுக தமிழ் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தியும் இருந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை கூட ஒரு மக்கள் இயக்கம் என்ற வகையில் தமது தலைமைகள் மீது வெறுப்படைந்த மக்களுக்கு சரியான அரசியல் தலைமையை இனங்காட்ட தவறியிருக்கிறது. வடக்கு முதலமைச்சர் தலைமையில் ஒரு மாற்றுத் தலமை உருவாகும் என பரவலாக பேசப்பட்ட நிலையில் வடக்கு முதலமைச்சர் மாற்று தலைமமைக்கு தலைமை கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது தலைமைகள் மேல் அதிருப்தியடைந்தவர்களாக மேய்பார் அற்ற மந்தைகளாக வாக்கு சீட்டினை பயன்படுத்தியுள்ளனர். இதுவே தென்னிலங்கை தேசிய கட்சிகள் வடக்கு, கிழக்கில் அதிகமாக கால் ஊன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

தமிழ் மக்கள் தமது தலைமைகள் மீது கொண்டுள்ள அதிருப்தியை சாதகமாகப் பயன்படுத்தி தென்னிலங்கை ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளாக வடக்கு, கிழக்கில் செயற்படுகின்றவர்கள் தாங்களும் தமிழ் தேசிய இனத்தின் மீது பற்றுள்ளவர்களாகவும், பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவே குரல் கொடுப்பவர்களாகவும் காட்டிக் கொள்வதன் மூலம் தென்னிலங்கை தேசிய கட்சிகளின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்துள்ளனர். வட மாகாணத்தைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி 92 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 73 ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன 27 ஆசனங்களையும் பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு ஊட்டப்படாமையும், தமது தலைமைகளின் மீதான வெறுப்பும், மாற்றுத் தலைமை பற்றிய தேடல்களுமே தென்னிலங்கை தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய தமிழ் கட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் நலன்சார் அரசியலையும், வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து மக்களை ஒரு அரசியல் அணியாக அணி திரட்டாத பட்சத்தில் அடுத்து வரும் தேர்தல்களில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடிய சூழலை உருவாக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று அணியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், சுரேஸ் பிறேமச்நந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் அணியும் இணைந்து புதிய கூட்டு ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அவ்வாறான ஒரு கூட்டு உருவாகியிருக்கும் பட்சத்தில் பல தரப்புக்களும் அதனுடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும், தமிழ் மக்கள் பேரவையினது ஆதரவை முழுமையாக பெறக் கூடிய சூழலும் உருவாகியிருக்கும். இதனால் வாக்கு சிதறலை கட்டுப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக அந்த அணி எழுச்சி பெறக் கூடிய நிலை உருவாகியிருக்கும். தமிழ் தேசிய மக்கள் முன்னனி வடக்கில் பெற்றுக் கொண்ட 90 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டனி வடக்கில் பெற்றுக் கொண்ட 40 ஆசனங்களையும் விட மேலும் பல ஆசனங்களை பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய நெருக்கடிகளை உருவாக்கி மாற்று அணியாக தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தியிருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை ஈபிஆர்எல்எப் தவறவிட்டிருக்கின்றது.

தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் மாற்று அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி மாறியிருக்கின்றது. இந்த மாற்றம் சாதாரணமாக ஏற்பட்டதொன்றல்ல. கடந்த 2010 ஆண்டில் இருந்து அந்தக் கட்சி தனது கொள்கையில் உறுதியாகவிருந்து தொடர்ச்சியான தோல்விகளுக்கு மத்தியில் முன்னெடுத்து வந்த அரசியல் வேலைத்திட்டங்களின் அறுவடையே. வடக்கு, கிழக்கு பகுதிகளின் எல்லா மாவட்டங்களிலும் தமது கட்சியின் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி சபைகளுடாக நிலைநிறுத்தியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனி யாழ்ப்பாணத்தில் இரு நகரசபைகளையும் கைப்பற்றி கூட்டமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது. தமிழ் மக்கள் மனங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகளால் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த மாற்றத்தையே தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், தமிழர் விடுதலைக் கூட்டனியும், தென்னிலங்கை கட்சிகளும், சில சுயேட்சைக் குழுக்களும், ஈபிடிபியும் அறுவடை செய்திருக்கின்றன. தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் தரப்புக்களை தவிர, தென்னிலங்கை சக்திகள் பெற்றுக் கொண்ட வாக்கினை எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் தேசிய கட்சிகளின் வாக்கு வங்கியாக மாற்ற வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலமே தமிழ் தேசியத்தின் இருப்பை தக்க வைக்க முடியும்.

மக்கள் வழங்கிய ஆணையை மதித்து தமிழ் தலைமைகள் தக்கு கிடைத்த உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வினைத்திறனுடனும், திட்டமிடலுடனும் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு கட்சி அரசியல் பாராது தமிழ் தரப்புக்கள் ஆதரவு வழங்கி போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வில் மாற்றத்தை எற்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலமே வெறுப்படைந்துள்ள மக்கள் மீது அரசியல் ரீதியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்ற நிலை மாறியிருக்கின்றது. இந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து நிரந்தர தீர்வுக்கான பயணத்தை மேற்கொள்ள தமிழ் தரப்புக்கள் முன்வரவேண்டும். இதுவே மக்கள் வழங்கிய ஆணையை மதிப்பதாக அமையும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *