Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய அமைச்சரவையில் செந்திலுக்கு அமைச்சுப் பதவி

புதிய அமைச்சரவையில் செந்திலுக்கு அமைச்சுப் பதவி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஆட்சியை கைப்பற்றும் என்றும் அப்போது அமையப் போகும் அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சுப் பதவியை செந்தில் தொண்டமானுக்கு வழங்குதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார அலுவலகம் பசறையில் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இந்த வெற்றியில் சிறுபான்மை மக்களது பங்களிப்பும் அவசியமாகிறது.
ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்கு ஆற்றிய சேவைகளை மறக்க முடியாது. அவர் மிகச் சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். இலங்கையில் தேசிய ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கும் மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் போராடியிருந்தார்.
அதேபோன்று பதுளையில் செந்தில் தொண்டமான் சக்திமிக்க தலைவராக செயற்பட்டு வருகிறார். ஊவா மாகாணத்துக்கு அவர் ஆற்றியுள்ள சேவைகள் அளப்பறியன. சிறுபான்மை மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை செந்தில் தொண்டமானால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
ஆதலால் பதுளை மக்கள் இணைந்து செந்தில் தொண்டமானின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். எமது ஆட்சி அமைந்ததன் பின்னர் செந்தில் தொண்டமானுக்கு அமைச்சரவையில், பெரும் சேவைகளை ஆற்றக்கூடிய மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் நாம் நிச்சயமாக ஏழு ஆசனங்களைக் கைப்பற்றுவோம். அதில் செந்தில் தொண்டமானின் வெற்றி இன்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டது எனத் தெரிவித்தார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *