செய்திகள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்தரிபால சிறிசேன பொறுப்பேற்றார்

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை இன்று முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒப்படைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று மாலை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தலைமைப் பதவியை மைத்திரிபால பொறுப்பேற்றார்.

சுமார் 50 ஆண்டுகள் உறுப்புரிமை மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து, பாரிய அர்ப்பணிப்புச் செய்து, பாதுகாக்கப்பட்ட மற்றும் கட்டியெழுப்பப்பட்ட கட்சி இரண்டாகப் பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்குவதனைத் தாம் ஒருபோதும் விரும்பவில்லை என மகிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

தாய்நாட்டை பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்புவதற்கும் பங்களிப்புச் செய்த சிறி லங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப்படுத்துதல் அதனை நேசிக்கும் அனைவரதும் பொறுப்பு என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்களின் பாதுகாப்பிற்கு, கட்சிக்குள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குறித்து அனைவரும் கவனம் செலுத்துவார்கள் என தாம் நம்புவதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களித்த 57 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் பிரார்த்தனை மற்றும் அபிலாஷைகளுக்காக எதிர்காலத்திலும் தாம் முன்நிற்பதாக முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.