செய்திகள்

சிறீரங்கத்தில் களம் இறங்க நெப்போலியன், குஷ்பு திட்டம்?

தமிழகத்தின் சிறீரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகை குஷ்புவும், பாஜக சார்பில் நடிகர் நெப்போலியனும் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால், அவர் எம்.எல்.ஏ பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்ததை அடுத்து, ஸ்ரீரங்கமும் வி.ஐ.பி தொகுதி என்ற அந்தஸ்தை இழந்து நிற்கிறது.

இந்த நிலையில், ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் வி.ஐ.பி அந்தஸ்து கிடைக்கப்போவது உறுதி என்று உற்சாகமாக சொல்லி வருகின்றனர் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸார். எப்படி என்று விசாரிக்கப் புகுந்தால், அவர்கள் சொல்லும் விளக்கம் அட இப்படியும் நடக்கலாமோ என்று வியக்க வைக்கிறது.

பி.ஜே.பி வட்டாரத்தில் விசாரித்தால், ”ஸ்ரீரங்கத்தில் எங்கள் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க-வில் இருந்து விலகி பி.ஜே.பி-யில் இணைந்தவருமான நடிகர் நெப்போலியனை நிறுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. நெப்போலியனை வேட்பாளர் ஆக்குவதன் மூலம் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு, பி.ஜே.பி-யில் உரிய அங்கீகாரம் வழங்குகிறோம் என்று உணர்த்த முடியும். அ.தி.மு.க-வுக்குச் சென்ற மாற்றுக் கட்சி நிர்வாகிகள், அந்த முதல் சந்திப்பு பரபரப்போடு நின்றுவிடுகின்றனர்.

ஆனால், பி.ஜே.பி அப்படி இல்லை என்று நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்போதுதான் திராவிடக் கட்சிகளில் இருந்து அதிருப்தியாளர்களை பி.ஜே.பி-க்கு அதிக அளவில் வரவழைக்க முடியும். அதனால், நெப்போலியனுக்கே ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நெப்போலியன், சினிமா நட்சத்திரம், திருச்சிக்காரர். அதோடு, அவர் இந்தப் பகுதியில் எம்.பி-யாகத் தேர்தெடுக்கப்பட்டவர் என்பதால் அறிமுகம் அதிகம் தேவையில்லை. அவரை வேட்பாளராக நிறுத்தினால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்று உற்சாகம் பொங்க சொல்கின்றனர்.

இன்னொரு புறம், காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நடிகை குஷ்பு களமிறக்கப்படுவார் என அக்கட்சி தரப்பில் ஒரு தகவல் உலா வருகிறது. “குஷ்புவுக்கு திருச்சியில்தான் கோயில் கட்டினார்கள், குஷ்பு மீது திருச்சியில்தான் தி.மு.க-வினர் செருப்பு வீசினார்கள். அப்படி திருச்சிக்கும் குஷ்புவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் குஷ்புவைக் களமிறக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. குஷ்பு நிறுத்தப்பட்டால், அவர்தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. என்பதில் சந்தேகம் இல்லை” என்கிறார்கள் காங்கிரஸார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் குஷ்பு, நெப்போலியன் போட்டியிடுகிறார்களோ இல்லையோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்ய கண்டிப்பாக வருவார்கள்தானே என்று கமென்ட் அடிக்கின்றனர் தொகுதிவாழ் மக்கள்!