செய்திகள்

சிறுபான்மையினரைப் புறந்தள்ளி 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டால் ஒன்று கூடி எதிர்ப்போம்: யாழ்ப்பாணத்தில் ஹக்கீம்

வடக்கு,கிழக்கு மற்றும் தென்பகுதி சிறுபபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களைப் புறந்தள்ளி 20 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற அரசு தீர்மானிக்குமானால் பெரும் விளைவுகளையே கொண்டுவரும்.இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தம் சிறுபான்மை மக்களின் விருப்பங்களைப் புறந்தள்ளி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமானால் நாமனைவரும் ஒன்று கூடிஎதிர்ப்போம் என நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வடபிராந்திய உதவிப் பொதுமுகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் யாழ்.பண்ணைப் பகுதியில் இன்று 22 ஆம் திகதி திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.இதன் போது அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தம் நிறுபான்மை மக்களின் விருப்பங்களைப் புறந்தள்ளி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமானால் நாமனைவரும் ஒன்று கூடி எதிர்ப்போம்.

அதுமட்டுமன்றி ஜே.வி.பி மூன்றாவது தடவையாகத் தென்னிலங்கையில் கலவரத்தில் ஈடுபடும் நிலையையே இந்த 20 ஆவது திருத்தம் ஏற்படுத்தும்.இதையொரு அபாய எச்சரிக்கையாக நான் இந்தவிடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-