சிறுவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க கொக்குவில் பொதுநூலகத்தால் சஞ்சிகை வெளியீடு (படங்கள்)
யாழ்.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுநூலகத்தின் சிறுவர் சஞ்சிகையான “ மொட்டுக்களின் மொழிகள்” வெளியீட்டு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(28.05.2015) பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் நிர்வாக அதிகாரி ஆர்.செல்வம் பிரதம விருந்தினராகவும், மக்கள் வங்கியின் யாழ்.பல்கலைக்கழக முகாமையாளர் ஆ.சத்தியமூர்த்தி,தேசிய சேமிப்பு வங்கியின் திருநெல்வேலிக் கிளை முகாமையாளர் திருமதி.சித்திரா தயானந்தன், பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.த.மலர்மகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
சஞ்சிகையை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்டு வைக்க முதற்பிரதியைப் பிரதம விருந்தினர் பெற்றுக் கொண்டார்.
சஞ்சிகையின் வெளியீட்டுரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீசன், யாழ்.பல்கலைக்கழகக் கல்வியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.த.கலாமணி ஆகியோர் நிகழ்த்தினர்.
நிகழ்வில் சஞ்சிகைக்கு ஆக்கங்கள் வழங்கிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
தரம் எட்டுக்கு உட்பட்ட மாணவர்களின் ஆக்கங்களைப் பெரும்பாலும் தாங்கி வந்துள்ள பல்சுவைக் களஞ்சியமான இந்த மொட்டுக்களின் மொழிகள் சஞ்சிகையில் சில துறைசார் பெரியவர்களின் கட்டுரைகளும் இடம்பிடித்துள்ளன.
குறித்த சஞ்சிகை அழகிய அட்டைப்படத்தைத் தாங்கி 20 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது.இந்த சஞ்சிகை வருடத்துக்கொரு தடவை வெளியிடப்படுமெனக் கூறப்பட்டாலும் காலாண்டுக்கு ஒருமுறையாவது வெளியிடப்பட வேண்டுமென்பதையே பலரும் விரும்புகின்றனர்.
வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்களும் இதே கருத்தையே வலியுறுத்திக் கூறினர்.
மொட்டுக்கள் இதழ் விரித்து அழகான பூவாக மலர்வது போல “இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்”. அதனால் தான் சிறுவர்களின் செயற்பாடுகள், ஆற்றல்கள், திறமைகள், கிரகிக்கும் தன்மை என்பவற்றை வெளிக் கொண்டு வருவதற்காகவும், சுய தேடல், சுயசிந்தனைகள் என்பவற்றைச் சிறு வயதிலேயே ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் “மொட்டுக்களின் மொழிகள்” என்ற இந்த சிறுவர் சஞ்சிகை கொக்குவில் பொதுநூலகத்தினால் வெளியிடப்படுகின்றது.
‘சிறந்த வாசிப்பாளனே சிறந்த எழுத்தாளானாக முடியும்’ என்பதால் சிறுவர்களின் வாசிப்பாற்றலையும், எழுத்தாற்றல்களையும் தூண்டுவதாக நிச்சயம் இந்த மொட்டுக்களின் மொழிகள் சஞ்சிகை அமையும்.
இனி வரும் காலங்களில் இந்த மொட்டுக்களின் கிறுக்கல்கலைக் கொண்ட இந்தச் சஞ்சிகை இன்னும் கூடுதலான மொட்டுக்களை இணைத்து தரமான ஆக்கங்களைத் தாங்கி வெளி வரும் என மேற்படி பொதுநூலகத்தின் நூலகர் செல்வி கி.அனிதா தெரிவித்தார்.
இன்றைய காலத்தில் சிறுவர்களுக்கான சஞ்சிகைகள், நூல்கள் வெளி வருவது அருகி வரும் சூழ்நிலையில் கொக்குவில் பொதுநூலகம் சிறுவர்களுக்காக பொருத்தமான ஒரு பெயருடன் இவ்வாறான சஞ்சிகையை வெளியிடுவது வரவேற்கத்தக்கதே.
அவர்களின் கன்னி முயற்சியைப் பாராட்ட வேண்டும். ஆனால் வருடத்துக்கொரு தடவை வெளியிடுவது என்பது சிறுவர்களின் அறிவுப்பசிக்கு சோளப் பொரியாகவே இருக்கப் போகிறது. ஒரு மாதத்திற்கு ஒரு தடவை வெளியிடுவது சிறுவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
அவ்வாறு வெளியிடுவது இலகுவான காரியமாகவில்லாவிட்டாலும் குறித்த சஞ்சிகையின் உருவாக்கத்துக்குக் காரணமானவர்கள் இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.
யாழ். நகர் நிரூபர்-