செய்திகள்

சிற்பரவியோப மனோலயம் (Trance state Consciousness)

மருத்துவர் சி. யமுனானந்தா

(Trance state Consciousness) மனித உடம்பில் 79,000 நரம்புகள் உள்ளதாகச் சித்த மருத்துவம் கூறுகிறது. இதில் முக்கியமானவை 24 ஆகும். அதில் 10 நாடிகள் மேல்நோக்கியும், 10 நாடிகள் கீழ்நோக்கியும் இருக்கும் நான்கு நாடிகள் இரண்டு பக்கங்களிற்கும் இரண்டாகப் பிரிந்து பாம்புபோலச் சுற்றி இருக்கும். இதனுள்ளே தான் உயிரோடு ஜீவ ஆற்றல் அறிதுயிர் (Consciousness) செய்கின்றது. இதனைப் பிராணன் என்றும் கூறலாம். 24 நாடிகளில் 10 நாடிகள் மிகவும் முக்கியம். 10 நாடிகளில் 3 நாடிகள் மிகவும் முக்கியம். இதனுள்ளேயே இரகசிய உறக்கம் (Sub Consciousness) ) நிகழுகின்றது. இம் மூன்றும் எமது உயிரை உடம்போடு இணைத்துக் கொண்டு இயங்குகின்றது. இந்நாடிகளுக்கு அமைவன 3 வாயுக்கள் ஆகும். அவை இடகலை (சந்திரன்), பிங்கலை (சூரியன்), சுழுமுனை (அக்கினி).

இடது நாசியிலே இயங்குகின்ற மூச்சு இடகலை ஆகும். வலது நாசியிலே இயங்குகின்ற மூச்சு பிங்கலை ஆகும். இரண்டு நாசியிலேயும் வந்துபோய் இயங்குகின்ற சுவாசம் சுழுமுனை ஆகும். அதாவது உட்சுவாசம், வெளிச்சுவாசம், சுவாச இயக்கம் ஆக இடகலை, பிங்கலை, சுழுமுனை அமைகின்றது.

யோகநிலை அடையும் சித்தர்கள்

வளர்பிறையில் முதல் 3 நாட்கள் காலையில் எந்த நாசி எப்படி இயங்கும் என்பதனையும், நாலாம் நாளிலிருந்து ஆறாம் நாள் வரை இது மாறுவதனையும் பின் ஏழாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை இயங்குவதையும் மாறி மாறி ஒரு ஒழுங்கில் இயங்குவதனை அறிந்திருந்தனர். அதாவது மூச்சுப்பயிற்சியினால் உயிரியற் கடிகாரத்தை கட்டுப்படுத்தச் சித்தர்களுக்கு ஆற்றல் இருந்துள்ளது.

யோகநிலையில் சந்திரநாடியாகிய இடகலையில் பன்னிரண்டு அங்குல அளவு உள்ளெடுக்கப்படும் பிராணன், அங்கே தங்கிப் பின் பிங்கலையில் வலப்பக்கம், காலங்குல அளவு வெளிப்படும். மீதமுள்ள எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இம்மூச்சுப் பயிற்சிகளை பன்னிரண்டு ஆண்டுகள் பயின்றுவந்தால் அட்டமாசித்திகளை அடையலாம்.

மதிதனில் ஈராறாய் மன்னும் கலையில்
உதயம் அதுகால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்று அறப்பார்க்கில்
திதமான ஈராறு சித்திகள் ஆமே.
(திருமந்திரம் 645)

உணர்வு நினைவோடு மனம் இருக்கிறபோது பிராணனும் அங்கிருக்கும். மனம் நினைப்பதை மறந்துவிட்டால் பிராணனும் நின்றுவிடும். சிவபிரார்த்தனையில் ஆழ்ந்து தியான யோகத்தில் நினைத்திருப்பவர்களுக்கு அந்த மனநிலையில் மனம் வசப்பட்டு அசைவற்று இருக்கும். இதுவே மனோலயம் ஆகும்.

மன் மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன் மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன் மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு
மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே.
(திருமந்திரம் 621)

மனதை அடக்கி சிவன்பால் செல்பவர்கள் சிவமுத்தர். மனம் பரவெளியில் பரம் பொருளோடு கலந்து ஆனந்த நடமிட மகிழ்ந்திருப்பர்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.
(திருமந்திரம் 652)

மேலும் பர ஒளியை சிந்தை செய்து ஆறு ஆதாரங்களினாலும் வரும் வினையைக் கடந்தால் ஆன்ம ஒளியை அறிந்துணர்வர்.

நாலும் கடந்தது நல்லரும் நாலைஞ்சு
பாலம் கடந்தது பத்துப் பதினைந்து
கோலம் கடந்த குணத்தாண்டு மூவிரண்டு
ஆலம் கடந்த தொன்று ஆர் அறிவாரோ.
(திருமந்திரம் 745)