செய்திகள்

சிவில் பாதுகாப்புப்படையின் 40,000 பேருக்கு நிரந்தர நியமனம்

சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்;த சுமார் 40 ஆயிரம் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனமானது 2015.05.05ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றிய –

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 2015.03.17ஆம் திகதி முன்வைக்கப்பட்ட, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தல் சட்டமூலத்துக்கு 2015.04.23ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றார். சிவில் பாதுகாப்பு படையினருக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அவர் பதவிக்கு வந்து சரியாக 100 நாட்களில் அதாவது 2015.04.23ஆம் திகதி, சிவில் பாதுகாப்பு படையினரை நிரந்தர நியமனம் வழங்குவதற்று அமைச்சரவை அங்கிகாரம் அளித்தது.

இதன்படி, ஓய்வூதிய கொடுப்பனவு, சம்பளம் வழங்கும் காலம், விடுமுறை என்பவற்றுடன் இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னர் அவர்கள் ஒரு மாதத்தில் பணிபுரிந்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான சம்பளம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்பட்டு வந்தது. எனினும், இனிவருங்காலத்தில் அவர்களுக்கான மாதச் சம்பளம் 25ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.