செய்திகள்

சீகிரிய சுவரில் கீறியதற்காக தமிழ் யுவதிக்கு கடூழிய சிறைத்தண்டனை: மகளை மீட்டுத்தருமாறு தயார் கோரிக்கை

தம்புள்ளையில் உள்ள சீகிரியா குன்றை பார்வையிடுவதற்காக தனது நண்பிகளுடன் சென்று, அறியாமை காரணமாக அங்குள்ள சுவரில் தனது நண்பியின் பெயரை எழுதியதற்காக நீதிமன்றத்தினால் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த ஏழைத் தமிழ் யுவதியை மீட்டுத் தருமாறு அவரது தாயார் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணியாற்றும் உதேனி சின்னத்தம்பி என்ற 23 வயது யுவதி சக ஊழியர்களுடன் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்றபோது தனது கூந்தல் பின்னினால் அங்குள்ள சுவரில் பெயர் எழுதியதாக குற்றம்சாட்டப்பட்டு பொலிசாரினால் 2 கிழமைகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார். உதேசினி தனது செயலை ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமார் அவருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.

இந்த நிலையில் , தனது மகள் தெரியாமல் செய்த தவறுக்கு இத்தனை பெரும் தண்டனையா என்று கேட்டு அவரை மீட்டுத் தருமாறு அவரது தாயார் ஊடகங்கள் மூலமாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது மகள் கடந்த 14.02.2015 அன்று தனது நண்பிகளுடன் சிகீரியாவிற்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள சுவரில் பலரது பெயர்கள் எழுதியிருப்பதை கண்டு அதில் தன்னுடைய பெயரையும் எழுதியுள்ளாள்.  அவளுக்கு அந்த சுவரில் எழுதக் கூடாது என்பது தெரியாது.  அப்படி தெரிந்திருந்தால் நிச்சயமாக அவள் எழுதியிருக்க மாட்டாள். தெரியாமல் செய்த தவறுக்கு எனது மகளுக்கு கடந்த(02.03.2015) அன்று தம்புள்ளை நீதிமன்றம  இரண்டு வருட சிறைத் தண்டணை விதித்துள்ளார்கள் . இப்படி நடக்குமென நாம் ஒருபோதும் நினைக்கவில்லை எனது மகளுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“எனது மகளின் வருமானத்தில்தான் நான் சீவியம் நடத்திவருகின்றேன். நான் மாவு, அப்பம் விற்றுத்தான் வாழ்ந்துவருகின்றேன்.”

“எனது மகள் கைது செய்யப்பட்டது பற்றி ஊடகங்களில் பல உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்துள்ளது. அதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.”

“சில ஊடகங்கள் எனது மகள் காதலனின் பெயரை எழுதியதாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர். அது முற்றிலும் தவறான செய்தி. எனது மகள் அவளுடைய பெயரையும் அவளது நண்பியின் பெயரின் முதல் எழுத்தையுமே எழுதியுள்ளார். அவர் வேறுயாருடைய பெயரையும் எழுதவில்லை. எனவே என்னுடைய மகளை ஊடகங்கள் அவமானப்படுத்தியுள்ளனர். இனியும் அதுபோன்ற செய்திகளை தயவுசெய்து யாரும் வெளியிடவேண்டாம். தவறான செய்திகளை போட்டு எனது பிள்ளையின் வாழ்க்கையை நாசமாக்கிவிடாதீர்கள்.”

“ஏற்கனவே இதுபோன்று எழுதிய சிலரை ஒரு சில தினங்களில் தண்டப்பணம் மாத்திரம் அறவிட்டு விடுதலை செய்துள்ளார்கள் என அறிகின்றேன். எனவே அது போன்று எனது மகளையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கமும், எங்களுடைய அரசியல் வாதிகளும் எப்படியாவது உதவி செய்யவேண்டும்.”

“எங்களுக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை நாங்கள் எனது மகளை மீட்பதற்கு கடும் கஷ்டப்பட்டோம். சிங்களம் தெரியாததால் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்கள் கூறியது கூட சரியாக புரியவில்லை கடைசியில் எனது மகளுக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்கள். “

“எனது மகளை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் அவள் தவறுதலாக எழுதிவிட்டால் அவளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு உதவி செய்யுங்கள். நான் ஒரு நோயாளி எனது மகள் விரைவில் வீடு திரும்பவில்லை என்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை எனவே எப்படியாவது எனது மகளை மீட்டுத்தாருங்கள் என உங்கள் எல்லோரிடமும் கெஞ்சி மன்றாடி கேட்கின்றேன்” என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட உதவி: newtamils.com

2