செய்திகள்

சீனாவின் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிக்கமாட்டோம்: ஜே.வி.பி. உறுதி

கொழும்பில் கடலை நிரப்பி அமைக்கப்படும் துறைமுக நகரத்திற்கான வேலைத்திட்டத்தை தொடருவதற்காக மகிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து மைத்திரிபால மற்றும் ரணிலுக்கு ஆட்சி அதிகாரங்களை வழங்கவில்லையென தெரிவித்துள்ள ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தாம் ஒருபோதும் அந்த வேலைத்திட்டத்தை தொடர இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தங்காலை நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அநுரகுமார எம்.பி. மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் முதற்தடவையாக கொழும்பில் காலி முகத்திடலுக்கு முன்னால் 575 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்கி சீனாவின் தீவினை அமைக்கின்றனர். எமது நாட்டில் வயல் நிலத்தை நிரப்புவதற்கான சட்டம் உள்ளதா? கடலை நிரப்புவதற்கான சட்டம் உள்ளதா? முதலில் கடலை நிரப்ப வேண்டுமென்றால் அதற்கான சட்டத்தை தயாரிக்க வேண்டும். அத்துடன் சுற்றாடல் அறிக்கை தயாரிக்கப்படவேண்டும்.

இதேவேளை, 575 ஏக்கர் நிலப்பரப்பை உருவாக்க குறைந்தது 1000 ஏக்கர் கடற்படுக்கையையாவது நிரப்பவேண்டும். இதன்படி இதற்காக 12 கோடி கியூப் கற்கள் வேண்டும். ஆனால் 2 கோடி கியூப் கற்கள் மட்டுமே இதுவரை தேடப்பட்டுள்ளன. மிகுது எங்கே உடைக்கப்படப்போகின்றது?

இந்நிலையில், கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராஜபக்ஷவை தோற்கடித்தது இதற்கு அல்ல. ரணில் மைத்திரிபாலவுக்கு அதிகாரத்தை வழங்கியதும் இதற்காக அல்ல. கடலை நிரப்பும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும். இது நிறுத்தப்படும்வரை ஜே.வி.பி. போராடும்.