செய்திகள்

சீனாவில் பெண் இறந்த தகராறில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

கம்யூனிஸ்டு நாடான சீனாவில் பெரும்பாலும் வன்முறைகள் நடைபெறுவதில்லை. இந்நிலையில் ஒரு பெண் இறந்த தகராறில் காவல் நிலையத்தை நூற்றுக்கணக்கானோர் தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூனான் மாகாணத்தில் உள்ள ஷூவாங்பெங் கவுண்ட்டியில் சாவோ ஹூய் என்ற 28 வயது பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர் சந்தேகம் எழுப்பினார்.

இதற்கிடையே ஹூய் சாவு குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றனர். அப்போது அதிகாரிகளை இடமறித்து செங்கல் மட்டும் பீர் பாட்டில்களால் உறவினர்கள் தாக்கினார்கள். அத்துடன் அவர்களை சிறைப்பிடித்தனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்தனர்.

ஆனால், அந்த கிராம மக்கள் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கோபம் அடைந்த கிராம மக்கள் போலீசார் அவர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி காவல் நிலையத்தை அடித்து நொறுக்கினார்கள். வன்முறைகளை பெரும்பாலும் கண்டிராத சீனாவிற்கு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.