செய்திகள்

சீனாவில் 4 நாள் பயணத்தை ஜனாதிபதி மைத்திரி இன்று ஆரம்பிக்கிறார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சீனா செல்கிறார். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் இன்று சீனா செல்கின்றனர்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர் சீனாவுக்கு செல்லும் முதலாவது பயணம் இதுவாகும். இலங்கை ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான குழுவினரை வரவேற்கும் முகமாக சீன விமான நிலையத்தில் பெரும் கோலாகலமான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

வரவேற்பு நிகழ்வுகள் சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீன ஜனாதிபதி i ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு அங்கு செல்கின்றார்.

பெய்ஜிங் நகரில் நாளை (26) நடை பெறவுள்ள அரச நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள வுள்ளார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் இலங்கை – சீன உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத் திடவுள்ளனர்.

சீன ஜனாதிபதியுடன் விசேட சந்திப் பினை நடத்தவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி, சீன பிரதமர் லீ கெச்சியங்கினையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதியின் சீன விஜயமானது இலங்கை – சீன உறவில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.