செய்திகள்

சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள்

யதீந்திரா

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் நம்புகின்றோம். அதன் உள் விவகாரங்களை கையாளும் திறன் அதற்குண்டு – இலங்கையின் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இதுதான். மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கிடையிலான உள்ளார்ந்த கலந்துiராயாடல்களில் பங்குகொள்ளும் ஒரு நண்பர் என்னுடன் பேசுகின்ற போது, ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, மனித உரிமை விழுமியங்களை முதன்மைப்படுத்தும் மேற்குலக நாடுகளும், அதனை முற்றிலுமாக எதிர்த்துநிற்கும் எதிர்-தாராளவாத முகாமிற்கு தலைமை தாங்கும் சீனாவும் எவ்வாறு மோதிக் கொள்;கின்றன என்பது தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்தார். சீனா எந்தளவிற்கு இந்த விடயங்களில் தலையீடு செய்கின்றது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இங்கு, முக்கியமாக கவனிக்க வேண்டி ஒரு விடயமுண்டு. அதாவது, இலங்கையின் ஒரு தேசிய இனமான தமிழர். தங்களுக்கான நீதியை மேற்குலக தாராளவாத நாடுகளிடமிருந்தே எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் மேற்குலக தாரளவாத நாடுகள் மட்டும்தான் உலகளாவிய மனித உரிமைகள் நிலைமைகள் மீது கரிசனை கொண்டிருக்கின்றன. ஏனெனில் மனித உரிமைச் சிந்தனை என்பதே தாராளவாத அரசியல் முறைமையின் ஒரு அங்கம்தான். மனித உரிமைச் சிந்தனையும் ஜனநாயகமும் தாராளவாத அரசியலின் இரு கண்களாகும். அரசியல் அதிகாரம், தாராளவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நாடுகளில் மட்டும்தான், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும்.

உதாரணமாக சீனாவில் மனித உரிமைகள் ஜனநாயகம் தொடர்பில் விவாதிக்க முடியாது ஏனெனில் சீனாவின் அரசியல் கட்டமைப்பு அடிப்படையிலேயே ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. இந்த பின்புலத்தில் பார்த்தால், இலங்கை விடயத்தில், தமிழர்களின் மேற்குலகம் நோக்கிய கோரிக்கையை பலவீனப்படுத்துவதே சீனாவின் பிரதான இலக்காக இருக்கின்றது. தமிழர்கள் இலங்கையின் உள்ளக கட்டமைப்புக்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்னும் அடிப்படையில்தான் மேற்குலக நாடுகளின்தலையீடுகளை கோரிவருகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றனர். அதே வேளை, ஒரு நியாயமான அரசியல் தீர்விற்காக, தமிழர் தரப்பு, இந்தியாவின் தலையீட்டையும் கோருகின்றது. ஆனால் மறுபுறமாக – இலங்கையை நம்பலாம், இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையீடு செய்யக் கூடாது, அதனை சீனா ஒரு போதும் பார்த்துக் கொண்டிருக்காது என்றவாறான பிரச்சாரங்களை சீனா சர்வதேசளவில் மேற்கொண்டு வருகின்றது.

இந்த இடத்தில் தமிழர்களின் மனித உரிமை மற்றும் ஜனநாயகரீதியான கோரிக்கைகளுடன் சீனா நேரடியாக மோதுகின்றது. இது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தமிழ்த் தேசிய கட்சியும் வாய்திறந்ததில்லை. ஏன்? ஆமெரிக்காவின், இந்தியாவின் தலையீட்டை கோருகின்ற தமிழ் தலைமைள், ஏன் மேற்குலக தலையீடுகளை எதிர்த்துவரும், சீனாவின் குறுக்கீடுகளை எதிர்க்கவில்லை? இதற்கு பின்னாலுள்ள அரசியல் என்ன? வாய்;ப்பு கிடைத்தால் சீனாவுடனும் ஒட்டிக் கொள்ளலாமென்று தமிழ்த் தலைமைகள் கருதுகின்றனவா?

தென்னிந்தியாவின் ராமேஸே;வரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில், மின்உற்பத்தி திட்டமொன்றிக்காக, சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்தியாவிற்கு தெரியும். ஒரு பிராந்திய சக்தி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு வழிகளை கையாளக் கூடிய திறனைக் கொண்டிருக்கும். அது சாம, தான, பேத, தண்டம் என்றவாறான அணுகுமுறைகளை உள்ளடக்கியிருக்கும். நிச்சயமாக ஈழத்தமிழ் தலைமைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையில்லை. இதுதான் யதார்த்தம் – என்றாலும் கூட, இந்தியாவிடமிருந்து ஆதரவை கோரிவரும் தமிழ் தலைமைகள், இந்தியாவின் நலன்கள் மீதான கரிசனையை காண்பிக்க வேண்டியது ஒரு தார்மீக கடமையாகும்.

இது இயல்பானதும் கூட. நாம் எந்த நாடுகளின் உதவிகளை கோருகின்றோமோ, அந்த நாடுகளின் நலன்கள் தொடர்பில் எங்களுக்கும் கரிசனை இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் எமது தார்மீக கடமையை செய்துகொண்டு குறித்த நாடுகளிடம் சில விடயங்களை எதிர்பார்கும் போது, நாம் சில விடயங்கனை சற்று கூடுதல் உரிமையுடன் கேட்க முடியும். ஆனால் தமிழ்ச் சூழலில் அவ்வாறான அணுகுமுறையை ஒரு போதுமே காணமுடியவில்லை. தேர்தலில் தோல்வியடைந்த ஒரு சில அரசியல்வாதிகள் இது தொடர்பில் அவ்வப்போது பேசுகின்றனரே தவிர, தமிழ் மக்களின் பிரதான தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தங்களின் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவதில்லை. புவிசார் அரசியல் தொடர்பில் பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சீனா தொடர்பில் தவறியும் வாய்திறந்ததில்லை.ஏன்?

அண்மையில், கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவரிடம் இது தொடர்பில் வினவியிருந்தேன். ஏன் நீங்கள் சீனா தொடர்பில் வாய்திறப்பதில்லை? நீங்கள் மேற்குலக தூதரகங்களில்தான் தஞ்சமடைகின்றீர்கள். அவர்களின் உதவியை கோருகின்றீர்கள் ஆனால் மேற்குலகு தலைமைதாங்கும், தாராளவாத உலக ஒழுங்கிற்கு  சவால்விடும் சீனா, தொடர்பில் நீங்கள் ஏன் வாய்திறக்க அஞ்சுகின்றீர்கள்? இதற்கு அவர் வழங்கிய பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை நாளைக்கு சீனாவிடமும் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டால் என்னசெய்வது? இரா.சம்பந்தனும் இந்தக் கருத்துப்பட அண்மையில் பேசியவர் என்றார். சீனாவையும் கண்டு வைத்தால் பிரயோசனமாக இருக்குமா? – இவ்வாறு சம்பந்தன் கேட்டதாக அவர் தெரிவித்தார். அவரது கருத்தும் அப்படியாகத்தான் இருந்தது. இப்போது நாங்கள் அவசரப்பட்டு சீனாவை எதிர்த்துவிட்டு, ஒரு வேளை, நாளைக்கு அவர்களிடமும் போக வேண்டிய நிலைமையேற்பட்டுவிட்டால் நிலைமைகள் சிக்கலாகிவிடலாமல்லவா? சம்பந்தனின் இவ்வாறான புரிதலுக்கும், தற்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர், மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்புவிட்டிருப்பதற்குமிடையில் பெரிய வேறுபாடில்லை.

இன்றைய தாராளவாத உலக ஒழுங்கிற்கு சீனாவை விடவும், வேறு எந்தவொரு பிரதான சவாலுமில்லை. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், தற்போது சோவியத்தின் இடத்தை சீனா மெதுவாக எடுத்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய சர்வதேச அரசியல் பரப்பில் இதுதான் பிரதான அரசியல் விவாதம். உண்மையில் இது தொடர்பில் எந்தவிதமான புலமையோ அனுபவமோ சம்பந்தனைப் போன்றவர்களிடம் இல்லை. அதே வேளை கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்களிடமும் இல்லை. இருந்திருந்தால் சீனாவை கண்டுவைப்பது பயன்தருமா என்றவாறான ஒரு கேள்வியை சம்பந்தன் கேட்டிருக்க மாட்டார். தமிழ் அரசியலிலுள்ள பலவீனமான பக்கம் இதுதான். தமிழ் அரசியலில் உள்ள ஒரு சிலரும் கூட, விடயங்களை சட்டக் கண்கொண்டு பார்ப்பவர்களாகவே இருக்கின்றனர். மனித உரிமைகள் விவகாரத்தில் தாராளவாத சக்திகளும் எதிர்-தாராளவாத சக்திகளும் எவ்வாறு மோதிக் கொள்கின்றன என்பது தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இருந்திருந்தால், சீனாவிடம் போவதால் நன்மை வருமா என்னும் கேள்விக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது.

சீனாவின் தற்போதைய ஜனாதிபதி, ஒரு வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கின்றார். மேற்குலக தாராளவாத உலக ஒழுங்கில் சீனாவால் எக்காலத்திலும் ஒரு உறுப்புநாடாக இருக்க முடியாது. இதன் காரணமாகத்தான் சட்டத்தினடிப்படையிலான உலக ஒழுங்கின் முதல் எதிரியாக சீனா கணிப்பிடப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உலகளாவிய முறுகல் நிலைதான் இனிவரப்போகும் உலக அரசியலை தீர்மானிக்கப் போகின்றது?

இந்த நிலையில் மேற்குலக தலையீடுகளை குறிப்பாக அமெரிக்காவின் பைடன் நிர்வாகத்தின் தலையீட்டை கோரும், தமிழ் தலைமைகள், முதலில் தாராளவாத உலக ஒழுங்கிற்குள் தாங்கள் இருக்கின்றார்களாக என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கின்றது. அதனை நிரூபிக்க வேண்டுமாயின், முதலில் இலங்கை விடயத்தில் சீனா மேற்கொண்டுவரும் தீர்மானங்கள் தொடர்பான தங்களின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்படும், அரசியல் அணுமுறைகள் ஒருபோதுமே தமிழர்களுக்கு கைக்கொடுக்காது.