செய்திகள்

சீன இராணுவத் தளம் இலங்கையில் இல்லை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார்

இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை என்று, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நேற்று எழுத்துமூலமாக வழங்கிய பதிலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் வர்த்தக உட்கட்டுமான திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் இந்த நாடுகளில், துறைமுக அபிவிருத்தி, எண்ணெய், எரிவாயு குழாய் கட்டுமானம், நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட வர்த்தக உட்கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் இருப்பதை இந்திய அரசாங்கம் அறியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கரிசனைகள், மற்றும் வர்த்தக நலன்கள் தொடர்பான எல்லா முன்னேற்றங்கள் குறித்தும், இந்திய அரசாங்கம் நிரந்தமான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும், தற்போதுள்ள பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கேற்ப, இவற்றைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.