செய்திகள்

சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை

சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவில்லை என வட மாகாண சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (29.4) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2015 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கிணங்க அரசாங்க சுற்றறிக்கை 25/2014 ற்கமைவாக 24.10.2014 ஆம் திகதி தொடர்ந்து 180 நாட்கள் திருப்திகரமான சேவைக்காலத்தினை பூர்த்தி செய்தவர்களுக்கு நிரந்தர நியமனம் அண்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சின் கீழான திணைக்களங்களில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றிய 850 பேரிற்கு அதிகமானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

சுற்றறிக்கைக்கு அமைவாக சேவைக்காலத்தினை பூர்த்தி செய்யாதவர்கள் பலருக்கு இந்நியமனம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களுக்கு நியமனம் வழங்குவதாக கூறி சிலரால் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் இதற்காக 12.12.2014 திகதியிடப்பட்ட NP/01/02/02/01(1) இலக்க பிரதம செயலாளரின் கடிதப்பிரதியுடன் விநியோகிக்கப்பட்ட விண்ணப்படிவத்தின் பிரதிகள் மீண்டும் விநியோகிக்கப்படுவதாக எமது அமைச்சிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு சுகாதார அமைச்சு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.