செய்திகள்

சுண்ணாகம் முதல் காங்கேசன்துறை வரையிலான பிரதேசவாழ் மக்கள் பேரழிவு அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள்!

யாழ்ப்பாணத்தில் குடிப்பதற்கு உகந்த நன்னீர் உள்ள மூன்று இடங்களில் சுன்னாகம் மற்றும் அதை அண்டிய பிரதேசம் முதன்மையானது. இங்கிருந்தே காங்கேசன்துறை முதல் மதவாச்சி வரை புகையிரதம் மூலம் நீர்விநியோகம் 1990கள் வரை நடைபெற்றது. வடமராட்சி கிழக்கின் வல்லிபுரம் மற்றும் மணற்காட்டுப் பிரதேசத்திலும் நன்னீர்ப்படுக்கைகள் காணப்படுகின்றன. தீவகத்தின் அல்லைப்பிட்டியும் குடிப்பதற்குகந்த நன்னீர்ப் படுக்கைகளைக் கொண்டுள்ளது.

இலங்கை மின்சாரசபையின் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு எண்ணெய் மற்றும் கிறீஸ் ஆகியன நிலத்தடி நீரில் கலப்பதால் உயிரினங்கள் வாழமுடியாத பேரழிவு அபாயத்தை வலிகாமம் தெற்கு மற்றும் வடக்குப் பிரதேசம் எதிர்நோக்குகிறது.

z1சுன்னாகம் மின்வலு நிலையமானது சுன்னாகம் நகர் மையத்தில் இருந்து தென்கிழக்காக 750 மீற்றர் தொலைவிலும் சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து தெற்காக ஏறத்தாழ 500 மீற்றர்  தூரத்திலும் அமைந்துள்ளது. இலங்கை மின்சாரசபையானது சுன்னாகத்தில் 1958 முதல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. காலப் போக்கில் இம் மின்னுற்பத்தி நிலையமானது இலக்சபானவிலிருந்து வரும் தேசிய மின்வழங்கலுடன்  இணைக்கப்பட்டது. போர் நடைபெற்ற காலத்தில் இலக்சபான இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வடபகுதிக்கான குறிப்பாக யாழ் மாவட்டம் முழுவதற்குமான மின்சாரத்தை சுன்னாகம் மின்உற்பத்தி நிலையமே மின்பிறப்பாக்கிகள் மூலம் வழங்கி வந்தது. இலங்கை மின்சார சபையானது காலத்துக்குக் காலம் வெவ்வேறு தனியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி இங்கு மின் உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளது. 2012 மார்கழி வரை அக்றிக்கோ (Aggreko Ltd ) நிறுவனமானது மின் உற்பத்தியில் ஈடுபட்டது. “நொதேண் பவர்” கம்பனி 2009 ஆம் ஆண்டு முதல் இங்கு மின் உற்பத்தியில் ஈடுபடுகிறது. இலங்கை மின்சார சபையின் உதுரு ஜெனனி நிறுவனமானது 2013 முதல் மின் பிறப்பாக்கிகள் மூலம் மின் உற்பத்தியில் ஈடுபடுகிறது. 2013இல் மீண்டும் இம்மின்னுற்பத்தி நிலையமானது லக்சபானவுடன் இணைக்கப்பட்டது. தற்போது யாழ்குடாநாடு முழுமைக்குமான மின்சாரமானது தேசிய மின் வலையமைப்பிலிருந்தே வழங்கப்படுகிறது. அத்துடன் “நொதேண் பவர்” மற்றும் உறு ஜெனனி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது மின்னழுத்த சீராக்கலுக்கு (Voltage Maintenance ) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2012 முதல் மின் உற்பத்தி நிலையத்திற்கு வடக்கு மற்றும் கிழக்காக உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள் தெரிய ஆரம்பித்தன. 2013 இல் நிலத்தடி நீரில் மேலும் பரவ ஆரம்பத்த கழிவு எண்ணெய்ப்படலம் 2014 இல் யாழ்ப்பாணத்தல் நிலவிய வறட்சிகாரணமாகவும் மேலும் பல கிலோமீற்றர் வரை பரவியது. தற்போது 2 கி.மீ வரையான சுற்றயல் பிரதேசம் குறிப்பாக மின் நிலையத்திற்கு வடக்கு மற்றும் கிழக்காக உள்ள பகுதிகளில் உள்ள குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய் பரவியுள்ளது.

நிலத்தடி நீரில் பரவிவரும் கழிவு எண்ணெய் காங்கேசன்துறை வரை பரவும் அபாயம் இருப்பதாக ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுன்னாகம் கிழக்கு‚ வடக்கு‚ மயிலணி‚ சூராவத்தை‚ ஏழாலை‚ ஊரெழு‚ மல்லாகம்‚ புன்னாலைக்கட்டுவன்‚ கட்டுவன்‚ குப்பிளான் வரையான பகுதிகள் வரை நிலத்தடி நீரில் எண்ணெயும் கிறீசும் கலந்துள்ளது. மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் தினமும் புதிய இடங்களுக்குப் எண்ணெய் பரவி பரவிவருகிறது.

நீண்டகாலமாக இயங்கிவரும் சுன்னாகம் மின்னிலையத்தால் திடீரெனப் பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது? பாதிப்பு ஏற்பட்டிருப்பது பற்றி பொதுமக்கள் வலிதெற்குப் பிரதேச சபைக்கும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் (National Water Supply and Drainage Board ) யாழ் பிராந்திய அலுவலகத்திற்கும் அறிவித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையோ‚ யாழ்ப்பாணத்தில் இயங்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபையோ (Central Environmental Authority)‚ யாழ் பல்கலைக்கழக விவசாய பீடமோ இவ்விடயம் குறித்து அக்கறை காட்டாது இப்பிரதேச மக்களை‚ விவசாயத்தை‚ உயிரனங்களை‚ நீர்வளத்தை பாதுகாக்க முற்படாமல் இரண்டு ஆண்டுகளாகியும் மௌனமாக இருப்பது ஏன்? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

2012 இல் மின்னிலையத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள 10 இற்கும் அதிகமான குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் கிணற்றில் உள்ள எண்ணெய்ப்படலம் குறித்து முறையிட்டிருக்கிறார்கள். அன்று இதுதொடர்பில் உரியவர்கள் அக்கறைகாட்டி எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்பை தடுக்க முன்வராததால் இன்று  இம் மின்னிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் மற்றும் கிறீஸ் ஆகியன பல கிலோ மீற்றர்கள் வரை பரவியுள்ளது.

z4

“கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எமக்கு தொண்டையில் கடி‚ தண்ணீரை விழுங்கினால் விளாங்காய் கயர் அடைப்பது போல் இருந்தது. தலைவலி இருந்தது. தண்ணீரை பரிசோதித்ததில் எண்ணெய் கலந்திருப்பது தெரியவந்தது. வீடு கழுவினால் நிலம் ஒட்டுவது போல் இருக்கும்‚ உடைகளைத் தோய்த்தால் கராஜில் வேலை செய்பவர்களுடைய உடைபோல் மாறிவிடும்” என்று சுன்னாகம் கிழக்குப் பகுதியில் வாழும் பொதுமகன் ஒருவர் குறிப்பிடுகிறார்.

எண்ணெய் கலந்த கிணற்று நீரை நீண்டநாள்கள் பலர் அருந்தியிருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு தொடர்ச்சியான வயிற்றுளைவும் வயிற்றுப்போக்கும் இருந்தது. கிணற்று நீரைப் பரிசோதித்த போது எண்ணெயும் கிறீசும் கலந்திருப்பது உறுதியானது.

அண்மைக்காலமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் தங்கள் கிணற்று நீரை பரிசோதிக்கு மாறு சுன்னாகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் முறையிட்ட போது பரிசோதிப்பதற்குரிய இரசாயனப் பொருள் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். எண்ணெய்ப் பரிசோதனை செய்யும் ஆராய்ச்சியாளர் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று கூறி ஏமாற்றம் தருகிறார்கள். இது குறித்து மேலும் ஆராய்ந்தபோது பிரச்சனையத் தவிர்ப்பதற்காக இரசாயனம் இல்லை என்று கூறுவது தெரிய வந்தது.
இந்தப் பிரச்சினையின் மூலம் என்ன?

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு எண்ணெயும் ஏனைய கழிவுகளும் ஆரம்ப நாள்களில் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது. பின்னர் காலப்போக்கில் மின்னிலையச் சூழலில் உள்ள ஒதுக்குப் புறமான நிலத்திலே விடப்பட்டு வந்தது. ஆரம்ப நாள்களில் மரத்தாலான மின்கம்பங்கள் கறையான் முதலானவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக நிலத்திலே கொட்டப்பட்ட எண்ணெயில் ஊறவிடப்பட்டே வீதிகளில் நாட்டப்பட்டது. தற்போது சீமெந்துத் தூண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கொட்டப்பட்ட எண்ணெய் ஒருகட்டத்தில் பாழடைந்த கிணறு ஒன்றினுள் விடப்பட்டது. கிணற்றினுள் கருங்கற்கள் போடப்பட்டு எண்ணை விடப்பட்டது. கிறேசர் போடப்பட்டு இக்கிணறு மூடப்பட்டது. அண்மைக்காலத்தில் நிலத்திலே துளையிடப்பட்டு கிணறுகள் தோண்டப்பட்டு கழிவு எண்ணை உட்செலுத்தப்பட்டது. நிலத்திலே உள்ள கழிவு எண்ணெய்த் தாங்கிக்கு மேலாகாக் கட்டடம் ஒன்று இருப்தாக பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலத்திலே விடப்பட்ட எண்ணையும் கிணறுகளும் மறைக்கப்பட்டுள்ளது. எண்ணை நில நீர்மட்டத்தை விட பல மடங்கு உயரத்திற்கு சேமிக்கப்பட்டதால் அழுத்தம் காரணமாக நீருற்றினுள் புக ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இயந்திரங்களில் இருந்து வெளியேறும் எண்ணெய் நீரூற்றுடன் வேகமாகக் கலக்க ஆரம்பித்தது.

z5சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் நீர் மாசடைந்துள்ளமை தொடர்பான கலந்துரையாடல் 2012

சுன்னாகம் மின் பிறப்பாக்கி நிலையத்திற்கு அண்மையிலுள்ள கிணறுகளில் நீர் மாசடைந்துள்ளமை தொடர்பான கலந்துரையாடல் வலிதெற்குப் பிரதேச சபை தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் 29.08.2012 அன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி‚ பொறியிலாளர்‚ மத்திய சுற்றாடல் அதிகாரசபை உதவிப் பணிப்பாளர்‚ நீர்வளச்சபை பொறுப்பதிகாரி‚ பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தர்‚ மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முதலான 24 பேர் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் நிறைவில் தவிசாளர் உள்ளிட்ட கலந்துரையாடல் குழுவினர் மின்பிறப்பாக்கி நிலையத்தைப் பார்வையிடச் சென்றனர்.  மின்பிறப்பாக்கி நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் ‚ எண்ணைய் என்பன உரிய முறையில் அகற்றப்படாது தரையில் தேங்கியிருந்தமையை இக்குழுவினர் கண்டனர். இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தவிசாளர் மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் கோரினார்.
கலந்துரையாடலும் களஆய்வும் நடைபெற்று 2 வருடங்கள் ஆகியும் எந்த வித உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை 2012 முதல் 2014 ஆவணி வரையான காலப் பகுதியில் சுன்னாகத்தில் உள்ள 150 கிணறுகளைப் பரிசோதித்ததில் 109 கிணறுகளில் (73 சதவீதம்) நியம அளவை விட மிகவும் உயரளவு எண்ணெயும் கிறீசும் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய வளாகத்தினுள் உள்ள கிணற்றில் 24.42 மில்லிகிறாம் எண்ணெயும் கிறீசும் காணப்பட்டது. அதே வேளை பொக்கணை முருகன் கோயில் கிணற்றில் 3.27 மில்லிகிறாம் எண்ணெயும் கிறீசும் காணப்பட்டது. சுன்னாகம் கிழக்குப் பகுதியில் உள்ள அநேக  வீடுகளில் 2 தொடக்கம் 8 மில்லிகிறாம் வரையிலான எண்ணெயும் கிறீசும் கலந்திருப்பது உறுதிப்படுத்தபப்பட்டது. இலங்கைச் சட்ட நியமங்களின் படி நீரில் ஒரு மில்லிகிறாமை விட கூடுதாலகப் பெற்றோலியக் கழிவுகள் கலந்திருப்பின் மனித பாவனைக்கு உகந்ததல்ல என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்துகிறது. எனினும் சருவதேச நியமத்தின் படி 0.2 மில்லிகிறாமை விட கூடுதலாக எண்ணெய் நீரில் கலந்திருப்பின் அந்நீரை மனித பாவனைக்கு எடுக்கமுடியாது.

ஆரம்பத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதி நிலத்தடி நீரே பாதிப்படைந்தது. தற்போது தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரதேசத்திற்குட்டபட்ட மல்லாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் எண்ணெய் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மல்லாகம் நீதிமன்றில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தெல்லிப்பழை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் சுன்னாகம் கிழக்குப் பகுதியில் பாதிக்கப்பட்ட 11 பொது மக்களும் இலங்கை மின்சாரசபைக்கு எதிராக தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளைப்  பதிவு செய்துள்ளனர். கார்த்திகை 11‚ 2014 அன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஜெ.ஜெயரூபன் ஊடாக 11 மனுதாரர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்கள் பிரதிவாதிகளாக நொதேண் பவர் கம்பனி‚ இலங்கை மின்சாரசபை (உதுறு ஜெனனி)‚ பிரமத பொறியிலாளர் (உதுறு ஜெனனி) ஆகியோரைக் குறிப்பிட்டு வழக்கினைப் பதிவு செய்தனர். வழக்கு 2014 கார்த்திகை 27 இற்கு ஒத்திவைக்கப்பட்டது.

z8இயற்கை மீதான பேரிடர் நிகழ பல்வேறு  காரணங்கள் முன்வைக்கப்படுகிறது

1.    சுன்னாகத்தில் இலங்கை மின்சாரசபைக்குரிய உபமின் நிலையம் அமைப்பதற்கு 1958 இலேயே உரிய முறையில் அனுமதி அளிக்கப்படவில்லை என 1980 களில் பொறியிலாளராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். பிரதேசத்தை ஆய்வு செய்த குழு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பைச் சுட்டிக்காட்டி இம்மின்னிலையத்தை வேறு இடத்தில் அமைக்க ஆலோசனை வழங்கியிருந்தது.

2.    கடந்த 2009 முதல் இலங்கை மின்சாரசபை ஆதனத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான நொதேண் பவர் கம்பனியானது பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மின் உற்பத்தி நிலைய நிருமாணத்துக்கான அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை.

3.    மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கும் நியமங்களுக்கும் முரணாக பிரதேச மக்களது சுகாதாரத்திற்கும் உடல் நலத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் கழிவு எண்ணெய் பாரியளவில் நிலத்தினுள் விடப்பட்டமையால் அக்கழிவு எண்ணெய் நிலத்தடி நீரோட்டத்துடன் கலந்து தற்போது 2 கீலோமீற்றர்கள் வரை பரவியுள்ளது.

4.    பாதிக்கப்பட்ட பொதுமக்களும் சமூக நலன்விரும்பிகளும் வலிகாமம் தெற்குப் பிரதேச சபை‚ சுற்றாடல் அதிகார சபை‚ மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை‚ உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை‚ பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் பணிமனை முதலான சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும் இதுவரை எதுவித நடவடிக்கையையும் எடுக்கத் தவறியுள்ளனர்.

5.    சுற்றாடல் மாசுபடுதலைத் தடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள சுற்றாடல் அதிகார சபையினர் இவ்விடயத்தில் தலையிட்டு நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கத் தவறியதுடன் நொதேண் பவர் கம்பனி‚ இலங்கை மின்சாரசபை‚ 2009 இற்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்காக மின் உற்பத்தி செய்த ஏனைய நிறுவனங்களுக்கும் காலத்துக்காலம் உரிய அனுமதிப் பத்திரங்களை வழங்கி சுற்றாடலை மாசுபடுத்துவோரை பாதுகாத்து வந்துள்ளனர்.

6.    வலிதெற்குப் பிரதேசபையானது பிரதேசசபைச் சட்டங்களுக்கு அமைவாக பிரிவு 106 இன் கீழ் இலங்கை மின்சாரசபைக்கு எதிராக 2012 இலே வழக்குத் தாக்கல் செய்திருப்பின் சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மின் உற்பத்தியை நிறுத்தி நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெயை அகற்றுவதற்கு நீதிமன்றின் மூலம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.

7.    பொதுமக்கள் முறையிட்டும் விவசாய அமைச்சரோ மாகாண சபை உறுப்பினர்களோ இவ்விடயத்தில் அக்கறை காட்டாது இருப்பதுடன் மக்களை ஏமாற்றி குறுகிய நோக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.
பொது மக்களது முறைப்பாட்டை அடுத்தாவது உரியதரப்பினர் நடவடிக்கை எடுத்திருப்பின் பேராபத்திலிருந்து இந் நன்நீர் வளத்தையும் அங்கு வாழும் மக்களையும் பாதுகாத்திருக்க முடியும்.

z10கழிவு எண்ணெய் கலந்த நீரை பாவனைக்கு அனுமதிப்பது ஒரு சமூகத்தின் அழிவுக்கே இட்டுச் செல்லும்

கழிவு எண்ணெய் கலந்த நீரை அருந்துவதால் தோல்‚ நுரையீரல்‚ இரத்தப் புற்றுநோய்‚ சிறுநீரக செயலிழப்பு‚ வலிப்பு போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படுமென சமகால மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் என்ற நூலின் 2014 பதிப்பு (Current Medical Diagnosis & Treatment 2014 – International Edition, Text Book of Forensic Medicine and Toxicology Fifth Edition, Oxford Text of Medicine) போன்ற மருத்துவ நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவு எண்ணெய் அடங்கிய நீரினை விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதால் கழிவு எண்ணெயில் கலந்துள்ள பார உலோகங்கள் விவசாய விளைபொருள்களிலும் கலந்து உடல்நலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்நீரை கால்நடைகள் அருந்துவதால் அவற்றினை உணவாகக் கொள்வோருக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படும்.

மிகவும் பழமை வாய்ந்ததும் சமூகநோக்கில் 1941 இல் உருவாக்கப்பட்டதுமான யாழ்ப்பாண மருத்துவச் சங்கமோ‚ பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் பணிமனையோ அன்றி உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையோ‚ பொதுமக்கள் இந்நீரை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புக் குறித்து உரிய எச்சரிக்கை எதையுமே இதுவரை செய்யாமையால் பொதுமக்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர்.

மக்களையும் நீர்வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும்

1.    கிணற்று நீரில் பரவக் கூடிய கழிவு எண்ணெய் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கல்.

2.    சுகாதார அமைச்சும் வடமாகணசபையும் இதனைப் பேரனர்த்தமாகப் பிரகடனப்படுத்தி விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளைச் செய்து எதிர்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

3.    சுத்தமான நீரை பிரதேசசபை மூலம் வழங்க  வழி செய்தல்.  பிரதேசபை வழங்கும் நீரை காலத்துக்காகலம் பரிசோதித்தல்.

4.    இலங்கை மின்சாரசபை ஆயுட்காலம் வரை போத்தலில் அடைக்கப்ட்பட்ட தண்ணீரை (Mineral water ) இப்பிரதேச மக்களுக்கு வழங்க நீதிமன்ற உதவியை நாடுதல். பாதிக்கப்பட்ட மக்கள் குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் நீரை வழங்க ஏற்பாடுகளைச் செய்தல்.

5.    கழிவு எண்ணையை அப்புறப்படுத்த சருவதேச நிபுணத்துவ உதவியை நாடுதல்.

6.    இலக்சபானாவிலிருந்து வரும் மின்சாரத்தை வழங்கி சுன்னாகத்தில் மின்உற்பத்தியை நிறுத்துதல். அல்லது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத மாற்று வழிகள் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளல்